தமிழ்நாடு

தமிழக வேளாண் பட்ஜெட்; “திருப்பதி போல் வருமானமா.. இல்ல பட்டை நாமமா?” - நூதன போராட்டத்தில் விவசாயிகள்!

பட்டை நாமம் அணிந்து, ஆடிப்பெருக்கிலும் வறண்டுபோன செய்யாறு ஆற்றில் நெல் மணிகளை விதைத்து...

Muthu Lakshmi

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, முதல் வேளாண் பட்ஜெட் அறிக்கை ஆகஸ்ட் 6 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது நடந்த ஒரு நிகழ்வு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளாகி, பல்வேறு அரசியல் கண்டனங்களை எழுப்பியது.

தரிசனத்தின்போது, தன்னுடன் 2026–2027ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையையும் எடுத்துச் சென்று பூஜை செய்தார். தமிழகச் சட்டமன்ற வரலாற்றிலேயே, அரசின் அதிகாரப்பூர்வ பட்ஜெட் ஆவணம் அவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, மாநில எல்லையைத் தாண்டி வேறொரு மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கேள்வி எழுப்பும் விதத்திலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய நூதனப் போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பச்சையம்மன் கோவில் பிரகாரத்தில் இந்த நூதனப் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு சாதகமா? அல்லது பாதகமா?" என்றும், "வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் வைத்து பூஜை செய்து கொண்டு வந்துள்ளார். அதேபோல், ஆந்திரப் பிரதேசத்தில் வழங்குவது போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், ஆந்திர மாநிலத்தில் தரிசனம் செய்து வந்த வேளாண்துறை அமைச்சரைப் போன்று, வேளாண் பட்ஜெட்டை பச்சையம்மன் கோவிலில் வைத்து வழிபட்டு, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர், செய்யாறில் நீரின்றி வறண்டு போன ஆற்றில் ஆடிப்பட்டம் நெல் விதைகளை தூவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், "விவசாயக் கடன் தள்ளுபடியில் ஏமாற்றிய அரசு, வேளாண் பட்ஜெட்டிலும் விவசாயிகளை ஏமாற்றக் கூடாது" என்றும் கோரிக்கை வைத்தனர். "தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிறு, குறு விவசாயிகளுக்கு முழு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.

அத்துடன், "கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளின் குடும்பங்களில், பெண்களின் கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு மட்டுமே மிஞ்சியுள்ளது" என்று வேதனை தெரிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் போது, "தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் திருப்பதி கோவில் வருமானம் போல் வளமாக இருக்குமா? அல்லது விவசாயிகளின் நெற்றியில் பட்டை நாமம்தான் மிஞ்சுமா?" என்று கேள்வி எழுப்பிய விவசாயிகள், பட்டை நாமம் அணிந்து, ஆடிப்பெருக்கிலும் வறண்டுபோன செய்யாறு ஆற்றில் நெல் மணிகளை விதைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.