தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினர். இந்த விழாவில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மேடையில் நின்றபடி இந்தியில் முழக்கமிட்டு கூட்டத்தில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். "ஹர் ஹர் மோடி, ஹமாரா மோடி, ஹமேஷா மோடி" என்று அவர் முழங்கியது அங்கு கூடிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது வெறும் பொதுக்கூட்டம் அல்ல, இது திமுக ஆட்சியின் ஆட்டத்தை முடிப்பதற்கான ஒரு பிரம்மாண்ட மாநாடு என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த மேடையில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அணிவகுத்து நின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர். நீண்ட காலத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் ஒரே மேடையில் தோன்றியது தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. நாங்கள் பகையல்ல, பங்காளிகள் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டது கூட்டணிக்குள் இருக்கும் நெருக்கத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை இந்த மாநாடு பறைசாற்றுகிறது என்று நயினார் நாகேந்திரன் சூளுரைத்தார். நூற்றுக்கு நூறு சதவீதம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கான பணிகளை பிரதமர் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செய்து வருவதாக அவர் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் சூரியன் எங்குமே இல்லை, அது மறைந்து போய்விட்டது என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் எழுச்சி வானமே வாழ்த்தும் அளவிற்கு உள்ளதாகக் குறிப்பிட்டார். எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பது அவரது பேச்சின் மையக்கருத்தாக இருந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.