தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, அரசின் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் தற்போது வரை பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் கஅறிவிக்கப்பட்டுள்ளன.
1. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது போல தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் ஆண்டு பட்ஜெட்டில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் வெளியிட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அரசுப் பள்ளிகளில் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள 10,000 அரசுப் பள்ளிகளில் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்த ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் தூய்மை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
3. பள்ளிப் பாடத்திட்ட மறுசீரமைப்பு
தமிழ்நாட்டின் பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கல்வி வெளிப்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
4. பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள்
மாணவர்களுக்கு சிறப்பான கல்விச் சூழலை உருவாக்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தச் சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இலவச கல்வி உதவி செய்ய உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. 3,734 அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கல்
அரசுப் பள்ளிகளில் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்வதற்கான திட்டமும் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 3,734 அரசு பள்ளிகள் ரூ.2,132 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
6. திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி திட்டம்
டெக்ஸ்டைல்ஸ் துறையை மேம்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பூரின் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜவுளித் தொழிலில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் திருப்பூர் ஜவுளித் துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல அரசு சார்பில் 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
7. பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம்
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளி வளாகங்களை போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான கல்விச் சூழலாக மாற்றும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
8. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினித் திட்டம்
கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மடிக்கணினித் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் டிஜிட்டல் கல்வி மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
9. மாணவர் தங்கும் வசதிகளுக்கான சிறப்பு நோக்கு நிறுவனம் – ரூ.10 கோடி
தமிழ்நாடு முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்த சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle - SPV) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட உள்ள இந்த நிறுவனத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10. ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உயர்தரப் பயிற்சி மற்றும் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள்கள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பீட்டில் நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12. போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையங்களில் SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்திய மற்றும் வங்கி சார்ந்த போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு ரூ.3.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
13. 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு உலகத்தர விளையாட்டுப் பயிற்சி
விளையாட்டில் ஆர்வம் கொண்ட 8 முதல் 18 வயதுக்குட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமையை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
14. தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதுடன், சர்வதேச அளவில் அவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்திற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
15. அரசு நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாக மாற்றம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூலகங்களின் சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் டிஜிட்டல் முறையில் தகவல் மற்றும் கல்வி வளங்களைப் பெறுவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
16. செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி
2031ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் உருவாக்கும் நோக்கில் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
17. கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள்
கருவுற்ற பெண்களுக்காக தமிழ்நாடு முழுவதும் சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் பெண்கள் இந்த மையங்களில் தங்கிப் பயன்பெற முடியும். அங்கு கட்டணமில்லா உணவு, மருத்துவ உதவி மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
18. மூத்த குடிமக்களுக்கான 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்
மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மருத்துவ மையங்கள் கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரடியாகச் சென்று மூத்த குடிமக்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கும். ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு இயன்முறை மருத்துவர் இடம்பெற்று சேவை வழங்குவார்கள். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
19. கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆடுகள்
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தலா 5 ஆடுகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய இந்தப் பிரிவினருக்கு வாழ்வாதார வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
20 .அண்ணனின் சீர் திட்டம்
திருமணம் நடைபெறும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் வகையில், ‘அண்ணனின் சீர்’ திட்டம் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.