தவெகவுக்கு மானப் பிரச்சனை.. பதட்டத்திலேயே வைத்திருக்கும் தாராபுரம்! அடுத்த 'மூவ்'க்கு தயாராகும் முதல்வர் TVK
தமிழ்நாடு

தவெகவுக்கு மானப் பிரச்சனை.. பதட்டத்திலேயே வைத்திருக்கும் தாராபுரம்! அடுத்த 'மூவ்'க்கு தயாராகும் முதல்வர்

தேர்தலில் தோற்றால் பெரும் பாதிப்பைச் சந்திக்கப் போவது எடப்பாடிதான் என்றாலும், ஏற்கெனவே வாக்கு சதவீதம் குறைந்துள்ளதால் திக் திக் மனநிலையில் இருக்கிறது தவெக தலைமை.

மாலை முரசு செய்தி குழு

இடைத்தேர்தல் முடிவுகளுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் உதட்டில் புன்னகையும், மனதில் புகைச்சலுமாகக் காத்திருக்கின்றனர்.

ஒருவேளை ஆளும் கட்சியான தவெக இரண்டிலும் தோல்வியடைந்தால், அதைவிட மோசமாக விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்ய முடியாது.

அத்துடன், ஆட்சிக்கு வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெறுவோம் எனக் கிட்டத்தட்ட மிரட்டியிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சமாளிக்க முடியாமல் தவெக அரசு இயந்திரம் திணறிவிடும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட்டணிக்குள் விவகாரங்களை அடித்துப் பேசும்.

தவெக தோல்வியடைந்தால், அதனால் வருத்தப்படும் ஒரே கூட்டணிக் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். விஜய் தான் பிரதமர், அமெரிக்க அதிபர் என்றெல்லாம் பேசிவந்த தவெக முகாமை, அக்டோபர் 3-ம் தேதிதான் இந்தியா கூட்டணிக் கூட்டத்துக்கு வர வைத்திருக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி, தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் தவெக தோல்வியடைந்தாலே அடுத்த சட்டமன்றக் கூட்டத்துக்கான கண்டென்ட் தயாரித்து விடுவார்.

ஒருவேளை இரண்டு தொகுதிகளிலும் அல்லது ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றாலே போதும், எடப்பாடி பழனிசாமி தானே பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எனத் தன்னிச்சையாக அறிவித்துக்கொள்ளும் அளவுக்கு உற்சாகமாகிவிடுவார்.

ஆனால், அதுவல்ல அவருக்கு பெரிய பிரச்சனை. தாராபுரம் தொகுதியில் மக்களுக்குப் பரிச்சயமான எஸ்.பி. வேலுமணி போன்ற தலைவர்களைப் பிரசாரம் செய்வோர் பட்டியலில் சேர்க்காமல் களம் கண்டுள்ளார். குறைந்தபட்சம் அங்காவது வெற்றி பெற்றால்தான் தலைநிமிர்ந்து நடக்க முடியும். ஒருவேளை அதிமுக இரண்டிலும் தோல்வியடைந்தால், சொந்தக் கட்சியிலேயே எடப்பாடியின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும்.

ஒருவேளை திமுக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், தவெகவுக்கு அடுத்த இடைத்தேர்தல் வரும் வரை நாட்கள் கெட்ட கனவாகவே நகரும். தவெக வெற்றி பெற்றால் திமுகவுக்கு!

இந்தத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டாலும், மீசையில் மண் ஒட்டாமல் இருக்க முடியும் கட்சிகள் இடதுசாரிகளும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே.

இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நெருக்கடி இருக்கும் சூழலில், நாளை மக்களின் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

தேர்தலில் தோற்றால் பெரும் பாதிப்பைச் சந்திக்கப் போவது எடப்பாடிதான் என்றாலும், ஏற்கெனவே வாக்கு சதவீதம் குறைந்துள்ளதால் திக் திக் மனநிலையில் இருக்கிறது தவெக தலைமை. குறிப்பாக, இளைஞர்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை என்பது வெற்றியைக் கேள்விக்குறியாக வைத்திருக்கிறது.

எனினும், தேர்தல் முடிவுகளைத் தாண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறது தவெக தலைமை. தேர்தல் முடிவுகளைப் பொறுத்து கூட்டணிக் கட்சியினரை எப்படி அணுகுவது என்பதை முடிவு செய்வதுடன், பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதா, இல்லையா என்ற முடிவையும் எடுக்க ஆயத்தமாகியிருக்கின்றனர்.

மேலும், ஆட்சியைப் பிடித்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இதில் கிடைக்கும் வாக்கு சதவீதத்தை வைத்தே யாருடைய களச் செயல்பாடுகள் எப்படிப்பட்ட முடிவுகளைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதையும் தலைமை கணக்கிட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தவெக அமைச்சரவை மறுசீரமைப்புத் திட்டத்தை வைத்திருந்ததாகச் செய்திகள் வந்தன. தேர்தல் முடிவுகள் பாதகமாகும்பட்சத்தில், அதையும் கையில் எடுக்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்