Bay of Bengal Low Pressure Area 
தமிழ்நாடு

இன்று இரவுக்குள் கரை திரும்ப வேண்டும்! நாளை முதல் மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி நிறுத்தம்.. தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை!

மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் (Fishing Tokens) வழங்கப்படாது...

Mahalakshmi Somasundaram

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக மீனவர்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிழக்குக் கடற்பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ள பைபர் மற்றும் வள்ளம் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் இன்று (நவம்பர் 12) இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நாளை(நவ 13) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது தொடர்ந்து வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடல் பகுதியில் வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்குக் கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் நவம்பர் 12-ம் தேதி இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக மீன்பிடித் துறைமுகங்களுக்குத் திரும்பி, அங்கு முறையாக நிறுத்தப்படுவதைப் படகு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் மீன்பிடிக்க அனுமதி இல்லை

காற்றழுத்த தாழ்வு நிலை உறவாகும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நவம்பர் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் (Fishing Tokens) வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு மட்டுமின்றி, தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகுகள் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளுக்கும் பொருந்தும்.

இவை அனைத்தும் இன்று இரவுக்குள் கரைக்குத் திரும்பி, தங்களது வழக்கமான மீன் இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் இந்த அறிவுறுத்தலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் மீன்வளத் துறையின் அறிவிப்புகளைக் கவனித்து அதன்படி செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.