2025 ஆம் ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணியளவில் பரபரப்பு சூழ தொடங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் சட்டைப் பையில் யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் சார் என்ற வார்த்தை பூதாகரமானது.
சட்டபேரவையில் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்படலாம் என மக்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மட்டுமே பாடப்பட்டு பேரவை தொடங்கியதால் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென அங்கிருந்து வெளியேறினார். கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பேரவையில் சிறிது நேரம் அமர்ந்து ஆளுநர் உரையை முழுதும் வாசிக்காமல் வெளியேறினார்.
ஆனால் இந்த முறை பேரவை தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஆளுநர் நடையை கட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகையின் சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.
சட்டசபையில் மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகவும், இந்த அவமரியாதை செயலால் ஆளுநர் வெளியேறி விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், தேசியகீதம் பாடப்பெறும். அதே போல மாநில சட்டமன்றங்களிலும் பாடப்பட வேண்டும். ஆனால் இங்கு தேசியகீதம் பாடப்படாதது அவமதிப்புக்கு சமம் என்றவாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த பதிவு போட்ட சில நிமிடங்களிலேயே அது நீக்கப்பட்டது. அதில் ஜனாதிபதி உரையின்போது தொடக்கத்திலும் இறுதியிலும் தேசியகீதம் இசைக்கப்படும் என்ற வாக்கியம் நீக்கப்பட்டிருந்தது. இதை கவனித்த அரசியல் விமர்சகர்கள் நாடாளுமன்றத்தில் தேசியகீதம் இசைப்பது குறித்த புரிதல் ஆளுநருக்கு இல்லாமல் போய் விட்டதா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி மற்றும் 2024 ஜனவரி 9-ம் தேதி நடந்த சட்டபேரவை கூட்டத்தின்போது, ஆளுநர் ஆர்என்ரவி 4 நிமிடம் மட்டுமே பங்கேற்றார். ஆளுநர் உரையை முழுதாய் வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்திய ஆர்.என்.ரவி சட்டென வெளியேறினார். மத்திய அரசு குறித்து ஆளுநர் உரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்ததை ஆளுநர் தவிர்த்தார்.
இதுவரை 2 முறை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பாதியில் வெளியேறிய ஆர்.என்.ரவி, இந்த முறை 3 நிமிடத்திலேயே உரையை வாசிக்காமலேயே வெளியேறியிருப்பது தமிழக அரசுடனான மோதல் போக்கை வளர்க்கும் விதமாகவே அமைந்துள்ளது.