தமிழ்நாடு

“இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை” - 14 மாவட்டங்களுக்கு அலர்ட்… சென்னைக்கும் வந்த வார்னிங்!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக...

Mahalakshmi Somasundaram

தமிழகத்தில் இன்று (ஆக.31) முதல் நாளை (செப்.1) வரை பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (செப்.1) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. நாளையும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையிலும் பெரிய மாற்றம் இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை மாலை நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் வானிலை நிலவரத்தை கவனித்து பயணங்களை திட்டமிடுவது நல்லது. குறிப்பாக இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.