தமிழ்நாடு

"காவிரி நீரை உடனடியாக திறந்து விட மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” - முதலமைச்சர்

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டுக்கு காவிரிநீரை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகவாத்திடம், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் எனக் கூறியுள்ளார். 

மேலும் தமிழ்நாட்டுக்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

காவிரி விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மத்திய அமைச்சரிடம் கர்நாடக அளித்துள்ளதாக கூறியிருக்கும் முதலமைச்சர், தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரை கர்நாடக அரசு உடனடியாக திறக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.