தமிழ்நாடு

"மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்"- தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்!

இதன் காரணமாக புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாகவே இருப்பதாகவும்...

Mahalakshmi Somasundaram

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், “தனக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்த்து மாபெரும் சரித்திர வெற்றி பெற்று ஜனநாயகனாக அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர்” என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்ற குறளை குறிப்பிட்டார்.

“நிதிநிலையில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது”

மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை குறித்தும் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் விளக்கினார். அவர் கூறுகையில், “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாய் விகிதம், வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு நிதிநிலை குறியீடுகளில் தமிழ்நாடு, இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையில் உள்ளது” என்றார்.

மேலும், மொத்த வருவாயில் வட்டி செலுத்துவதற்கான தொகையும், பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

“வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்”

தொடர்ந்து நிதிச்சுமை குறித்துப் பேசிய மரிய வில்சன், இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவோம்” என உறுதியளித்தார். தவெக அரசின் கொள்கைகள் குறித்து பேசிய அவர், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி, சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, ஊழலற்ற நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசு ஆகியவை அரசின் முக்கிய இலக்குகள் என தெரிவித்தார்.

இந்நிலையில், அரசின் முதல் பட்ஜெட்டில் மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான அறிவிப்புகள் என்னென்ன வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.