Tamil Nadu TVK Government Power Cuts 
தமிழ்நாடு

திமுக.. அதிமுக.. பாஜக.. யாருமே இல்ல.. முதல்வர் விஜய் கற்பனையிலும் நினைத்துப் பார்க்காத அந்த "எதிரி"

செப்டம்பர் மாதத்திலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு தொடர்பான புகார்கள் மீண்டும் அதிகரித்தன...

Mahalakshmi Somasundaram

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகளின் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து தலைவலியாக மாறியுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. மேலும், 10 ஆயிரம் அதிக சுமை கொண்ட மின் வழித்தடங்களை மேம்படுத்தி, மின்வெட்டில்லா நிலையை உருவாக்குவோம் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்த புகார்கள் எழ தொடங்கின.

குறிப்பாக, மே மாத இறுதியில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, மக்கள் சிரமங்களை சந்திப்பதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசை விமர்சித்தார். இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், மின்வாரியம் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. சில பகுதிகளில் ஏற்பட்ட மின்தடைக்கு உள்ளூர் தொழில்நுட்ப கோளாறுகள், அதிகரித்த மின் தேவை, கேபிள் பிரச்சினைகள், மின்மாற்றி மீது அதிக சுமை, துணை மின் நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சில பகுதிகளில் மின் உள்கட்டமைப்பை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாகவும், ஆவடி பகுதியில் மின்சார ஃபியூஸ்களை அகற்றிய சம்பவங்கள் சிசிடிவியில் பதிவாகியிருப்பதாகவும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். அதே நேரத்தில், மாநிலத்தின் பல மின்மாற்றிகள் பழமையான நிலையில் இருப்பதும், அதிகரித்து வரும் மின் சுமையை சமாளிப்பதில் சிக்கல் இருப்பதும் அவரது விளக்கத்தில் இடம்பெற்றது. மே மாதத்தில் தொடங்கிய பிரச்சினை ஜூன் மாதத்திலும் ஓயவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதாக புகார்கள் எழுந்தன.

வீடுகள் மட்டுமின்றி சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்களின் படிப்பு, ஆன்லைன் பணிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, ஜூன் 10-ம் தேதி மின்வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ‘திட்டமிட்ட மின்தடை இருந்தால் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும், அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படக்கூடாது என்றும்’ உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, மின்வெட்டு விவகாரம் வெறும் எதிர்க்கட்சிகளின் அரசியல் விமர்சனமாக மட்டும் இல்லாமல், மின்வாரியத்தின் நிர்வாக உத்தரவுகளுக்கும் காரணமாக மாறியது.

இருப்பினும் செப்டம்பர் மாதத்திலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு தொடர்பான புகார்கள் மீண்டும் அதிகரித்தன. இதற்கு “மின் தேவை அதிகரித்ததுடன், காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் மின் பற்றாக்குறை ஏற்பட்டதாக” மின்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். இதையடுத்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னையின் பல பகுதிகளிலும் நீண்ட நேர மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்கள் எழுந்தன.

செப்டம்பர் 18-ம் தேதி வியாசர்பாடியில் தொடர் மின்வெட்டை கண்டித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் ஏற்பட்ட மின்தடைக்கு நிலத்தடி கேபிள் பழுது காரணம் என TNPDCL விளக்கம் அளித்தது. மின்வெட்டு விவகாரம் எந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதற்கு மற்றொரு சம்பவமும் பேசு பொருளானது. செப்டம்பர் 23-ம் தேதி மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு நடத்திய நிலையில், மறுநாளே மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் போதும் மின்தடை ஏற்பட்டதாக PTI செய்தி தெரிவித்தது. 

மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சின்போது மின்சாரம் தடைபட்டு, ஜெனரேட்டரை இயக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் கூறிய காட்சி வெளியாகியது. அதே போல மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் மின்தடை ஏற்பட்டது. மேலும் தாராபுரத்திலும் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் இதேபோன்ற மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திலேயே பிரச்சினை முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்திலும் மின்வாரியத்தின் திட்டமிட்ட பராமரிப்பு மின்தடை அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

கடந்த மே மாதம், தவெக அரசு விஜய்யின் திரைக் கவர்ச்சியால் ஆட்சிக்கு வந்தது என்றும் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தனர். அத்துடன் திமுகவை எதிர்க்கட்சி அரசியலில் யாரும் விஞ்ச முடியாது என்றும் எச்சரித்தனர். ஆனால் எல்லா கட்சிகளும் எடுக்கும் முயற்சிகளைத் தாண்டி ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

மக்களிடம் உள்ள விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்ய முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன. ஆனால் இந்த 4-5 மாத ஆட்சியில், எந்த கட்சியையும் விட மக்களிடையே ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்த ஒன்றாக இந்த மின்வெட்டு பிரச்சனை உள்ளது.

அரசியலில் பழுத்த கட்சிகளை, தலைவர்களை எதிர்கொள்ளும் தவெக அரசு இந்த சிறிய நிர்வாக கோளாரை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் வெளியில் இருந்து 4500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இன்று (அக் 07) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் இது குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் “மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 3000 மெகா வாட் மின்சாரம் தமிழகத்திற்கு  கிடைக்கவில்லை என்றும் மேலும் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மின் தேவை அதிகரிக்கும் என்பதால் மட்டுமே வெளியில் இருந்து  மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு”  என தெரிவித்துள்ளார். 

இதனால் தான் ஆட்சிக்கு வந்த தொடக்கத்திலேயே தவெக அரசு எதிர்கொண்ட மின்வெட்டு விவகாரம், தற்போது வரை ஒரு தொடர்ச்சியான நிர்வாக சவாலாக மாறியுள்ளது. தேர்தலுக்கு முன் “24 மணி நேர தடையற்ற மின்சாரம்” என்ற வாக்குறுதி.. ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாத மின்வெட்டு புகார்கள். அதற்குப் பிறகு மின்வாரியத்தின் விளக்கங்கள். தொடர்ந்து மின்சாரம் கொள்முதல். மக்களின் சாலை மறியல் போராட்டங்கள்.. அமைச்சர்கள் நிகழ்ச்சிகளிலேயே ஏற்பட்ட மின்தடைகள்.. இப்போது அக்டோபரிலும் தொடரும் மின்விநியோகத் தடைகள். என மின்சாரப் பிரச்சனை தொடர்ந்து தலைதூக்கி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்