அண்டை மாநிலத்திற்கு தரவுகள் கசிந்ததாகவும், தமிழ்நாட்டின் முதன்மை முதலீட்டு நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாட்டில் சில அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளைத் அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை யார் செய்தது?, இதன் பின்னால் ஆந்திர அரசின் சதி இருக்கிறதா? என்பது போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
தகவல்களின்படி, தவெக அரசு பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், ஜூலை 31 அன்று விடுவிக்கப்பட்ட ஆறு அதிகாரிகள் உட்பட, கிட்டத்தட்ட 15 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராஜினாமா செய்தவர்களில் மூன்று பேர் ஏற்கனவே ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹவாஷின் (Hwashin), சியோயான் (Seoyon) மற்றும் ஐவாமெட் (Iwamet) ஆகிய மூன்று முக்கிய தென் கொரிய வாகன உதிரிபாக நிறுவனங்கள், தமிழகத்திற்கு சுமார் ₹1,614 கோடி மதிப்பில் வரவிருந்தது. இந்த முதலீடானது பின்னர் ஆந்திரப்பிரதேசத்திற்கு மாறியது. இது தவிர, ராயல் என்ஃபீல்டு, மசாகான் டாக் கப்பல் கட்டும் தளம் மற்றும் ஹையர் எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள், தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆந்திராவில் தங்கள் ஆலைகளை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரமானது தமிழகத்தில் ஆளும் அரசினை விமர்சிக்க ஒரு காரணமாக அமைந்தது.
இது தொடர்பாக நவம்பர் 3ம் தேதி அன்று தகவல் நம்பகத்தன்மை பிரிவில் இருந்து, இந்த விவகாரத்தை விளக்கும் படியாக ஒரு பதிவு ஒன்றினை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "ஆந்திராவுக்கு சென்றதா தமிழ்நாடு முதலீடுகள்; உண்மை என்ன? என்ற தலைப்பில் இருந்து ஒரு பதிவு வந்தது அதில், Hyundai நிறுவனத்தின் உதிரிபாகங்கள் மற்றும் வாகன உற்பத்தி சார்ந்த சப்ளையர் நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் Seoyon E-Hwa மற்றும் Hwashin போன்ற கொரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருகின்றன. ஆந்திராவில் Kia நிறுவனம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, Seoyon E-Hwa நிறுவனம் 2017ஆம் ஆண்டிலேயே ஆந்திராவிலுள்ள அனந்தபூரில் தனது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது. தற்போது Kia நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு சில சப்ளையர் நிறுவனங்கள், ஆந்திரப் பிரதேசத்தில் தங்களது உற்பத்தியை விரிவுப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதலீடுகளை விரிவுப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான (EV) உதிரிபாகங்கள் மற்றும் உயர்தர வாகன மின்னணுவியல் (Automotive Electronics) உற்பத்தியிலும் தங்களை விரிவுப்படுத்தி வருகின்றன. இத்தகைய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்நிறுவனங்கள் EV உதிரிபாக உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையங்களை (R&D Centres) தமிழ்நாட்டில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக, மற்றொரு கொரிய நிறுவனமான Inzi Controls, தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை புனேவில் அமைப்பதற்கு பதிலாக சென்னையைத் தேர்வு செய்துள்ளது.
அடுத்தகட்டமாக Hyundai நிறுவனம் மற்றும் அதன் சப்ளையர் நிறுவனங்களுக்கான முதலீடு திட்டங்களை அறியவதற்கும், தேவையான உதவிகளை புரிவதற்கும், விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை Guidance Tamil Nadu மேற்கொண்டு வருகிறது" என்ற விளக்கத்தினை பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 31-வது சிஐஐ கூட்டாண்மை மாநாடு நடைபெற்றது. இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (CII), மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து இந்தச் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் மட்டும் 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் ரூ.9.02 லட்சம் கோடி முதலீடுகளை உறுதி செய்தது ஆந்திர அரசு. இதன் மூலம் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்வில் ஆந்திர முதல்வரின் பதில் என்பது பெரும் பேசுபொருளாக உருவெடுத்தது. அதாவது, செய்தியாளர் ஒருவர் சந்திர பாபு நாயுடுவிடம், “தொழில் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுத்து ஆந்திரப் பிரதேசத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியதற்கு ஆந்திர முதல்வர், "உங்களுக்கு மசாலா வேண்டும், எனக்கு ரிசல்ட் வேண்டும்" என்று ஒரு பதிலினை அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்த பதிலுக்கு தனது X தளப்பக்கத்தில், முன்னாள் அமைச்சர் TRB ராஜா, “ஒரே நாளில் ₹5.35 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்த ஆந்திரப் பிரதேசம்.. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாடு போட்டியிட்டுப் பெற்றிருக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள்” என்று சுட்டிக் காட்டி ஒரு பதிவினை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களின் படி, ஜூன் 30 அன்று 'கைடன்ஸ்' நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளபட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்த வாரத்தில், 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் ஊழியர்கள் பல குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த 'தரவுகள் கசிவு' தொடர்பாக செய்யப்பட்ட ராஜினாமாக்களை சுற்றியுள்ள சூழ்நிலைகள் சர்ச்சைக்குரியதாகவே தற்போது வரை இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் ராஜினாமா செய்த 15 ஊழியர்களில் 3 பேர் ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் இணைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது 'தரவுகள் கசிவு' செய்யப்பட்டதை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்ததுள்ளது. அதில், முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திரப் பிரதேசத்துடன் பகிரப்பட்டிருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. 'கைடன்ஸ் தமிழ்நாடு', மாநிலத்தில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. முன்மொழியப்பட்ட (propose) திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல்கள், நிறுவனக் கலந்துரையாடல்கள் மற்றும் முதலீட்டுக்கு வழிவகுத்தல் ஆகியவை இதன் பொறுப்புகளில் அடங்கும்.
ஆனால், தற்போது வரை இந்த 'தரவுகள் கசிந்தது' என்ற கூற்றுக்கான ஆதாரங்கள் என்பது வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தரவுகளின் கசிவினை குறித்து ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் கட்சியான டிடிபி (TDP), இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தங்கள் மாநிலத்தின் முதலீட்டு வளர்ச்சிக்கு தங்களின் சொந்தக் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர் நட்பு சூழலே காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக 'இந்தியா டுடே' தெரிவித்துள்ளது.
இதில் முக்கிய 3 குற்றசாட்டுகளாக, "முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்களை ஆந்திரப் பிரதேசத்துடன் பகிர்ந்துகொண்டது, தமிழ்நாட்டிற்கான முதலீட்டுத் திட்டங்களை ஆந்திராவிற்கு மாற்றியது, தமிழ்நாடு அரசு தரவுத்தளத்தில் இருந்து ஆந்திர அரசுக்கு தகவல் கசிந்தது" போன்ற முக்கிய குற்றசாட்டுகளை எதிர்கொள்ளப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது X தளபக்கத்தில், "தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களால் பல பத்தாண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நிறுவனம், தற்போதைய ஆட்சியின் முதிர்ச்சியற்ற, சமூக ஊடகங்களால் தூண்டப்பட்ட அரசியலால் அவமானப்படுத்தப்படுவதைப் பார்ப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. ஒரு சில ஊழியர்கள் வெளியேறியதால் முதலீடுகள் காணாமல் போய்விடும் என்று அரசாங்கம் கூறுவது இன்னும் பரிதாபகரமானது! தமிழ்நாட்டின் முதலீட்டு இயந்திரமும், தொழில் சூழலும் உண்மையிலேயே அவ்வளவு பலவீனமாக இருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகிறதா? இதில் உள்ள முரண் என்னவென்றால், இப்போது வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016-21) நியமிக்கப்பட்டவர்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது திமுக அரசாங்கம் அவர்களை விரட்டியடித்ததா? இல்லை! நாங்கள் அனுபவத்திற்கு மதிப்பளித்தோம், தனிநபர்களை மதித்தோம், நிறுவனத்தின் தொடர்ச்சியை உறுதி செய்தோம். மிக முக்கியமான முதலீட்டு மேம்பாட்டுத் தலைவர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியபோதும், நாங்கள் கண்ணியத்தைக் காத்தோம். இப்போது, தலைமைத்துவத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, இந்த அரசாங்கம் தனது சொந்த நிறுவனத்தையே பலவீனப்படுத்துகிறது, வழக்கம் போல் அதன் தோல்விகளுக்கு திமுகவைக் குறை கூறுகிறது! துறையை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள். தமிழ்நாட்டின் திறன்களைக் குறைத்து மதிப்பிடுவதை நிறுத்துங்கள். தமிழ்நாட்டிலிருந்து முதலீடுகளை யாராலும் எளிதாகப் பறித்துவிட முடியாது. ஆனால் திறமையற்ற, பாதுகாப்பற்ற மற்றும் உணர்வற்ற முடிவெடுத்தல் நிச்சயமாக அவர்களை விரட்டியடித்துவிடும்! நிறுவனங்களுக்குத் தேவை தலைமைத்துவம், அரசியல் நாடகங்கள் அல்ல!" என்று அவர் கவலையுடன் தனது எதிர்ப்பினை பதிவிட்டிருந்தார்.
"தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது
Guidance TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல முதலீட்டாளர்கள் முன்வர முக்கிய பங்காக வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் அனைத்தும் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அ.தி.மு.க ஆட்சிக்குப் பிறகு தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, ஆற்றலையோ கொச்சைப்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்குப் பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டு, இனி “வழிகாட்டல்-க்கே வழிகாட்டுதல் இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே GuidanceTN ஊழியர்களிடம் இருந்து பெரும்பாலானோர் பணியில் இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று நிவாரண கடிதம் அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திரத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் மூலம் இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாக உள்ளது.
இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்கமளிக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான வசதிகளை செய்து, எளிதாக தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று காட்டமாக தனது பதிவினை பதிவிட்டுள்ளார்.
இவர்களை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை பேணக்கோரியும், இந்த விவகாரத்தில் அந்த 15 பேர் யார்? என்பது குறித்தும், அவர்களுக்கு தரப்பட்டதாக கூறப்படும் அழுத்தம் குறித்தும் தெரிவிக்ககோரி பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, தொழித்துறை அமைச்சர் கீர்த்தனாவின் மீது பல விமர்சனங்களும் வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, அவரது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், "மே 2026 முதல் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அனைத்து நிறுவனங்களின் விவரங்களையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். இந்த 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ₹1,14,811 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளைக் குறிக்கின்றன" என்று கூறிய பதிவில், தூத்துக்குடி (Thoothukudi), டியூட்டிகோரின் (Tuticorin) என்ற ஒரே ஊரின் பெயரை, எழுத்துக்களின் அடிப்படையில் இரண்டாக பிரித்து முதலீடுகள் அந்த மாவட்டங்களுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டது சர்ச்சையாக பேசப்பட்டது.
மேலும், இவரது இந்த பதிவானது அரசியல் வட்டாரத்திலும் சரி மக்களின் மத்தியிலும் சரி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தற்போது, இந்த 'கைடென்ஸ் தமிழ்நாடு'வில் இருந்து 15 ஊழியர்கள் ராஜினாமா செய்ததை தரவுகள் கசிந்ததோடு ஒப்பிட்டு பேசுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் அதிமுக காலத்தில் இருந்தே பணியில் இருப்பதாகவும், திமுக காலத்தில் அவர்களது பணி நீடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதில் தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்?, தமிழ்நாட்டிற்கு வரவிருந்த முதலீட்டாளர்கள் ஆந்திரா செல்ல காரணம் என்ன? என்பது குறித்து தெளிவான விளக்கத்தினை தமிழக அரசு வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.