சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தென்சென்னை மாவட்ட பாஜக சார்பாக சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் "மகளிர் தின" நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கானது. 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் பெண்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழகத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட பாஜக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்கை நிர்வகிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணான வைஷாலியை தேர்ந்தெடுத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி.
திமுகவின் குற்றங்களை மறைப்பதற்காக மொழிப்போர், மறுசீரமைப்பை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இல்லாத வாளை வைத்துக் கொண்டு திமுக போருக்கு தயாராவதாக கூறுகிறது. பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பொதுமக்கள் முன்வந்து ஆதரிக்கின்றனர்
என்னை இந்தி இசை, இந்திக்காக போராடுவதாக கூறும் திமுக இணைய தளவாசிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறேன் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும்போது கூட மூன்றாவது மொழியாக தெலுங்கை மட்டுமே நான் கூறியிருந்தேன். ஏனென்றால் அது சகோதர மொழி என்று.
முதலமைச்சர் எனக்கு பதிலளிக்கும் போது நான் தேவையென்பதால் மூன்றாவது மொழியை கற்றுக் கொண்டதாகவும், நான் தேவையால் கற்றுக் கொண்டதாகவும், வாழ்த்திலேயே, திராவிட இயக்கத்தை பின்பற்றுவதாகவும் கூறினார்.
வயதான பின்னர் தெலுங்கு கற்றுக் கொள்வது எவ்வளவு கஷ்டம் என எனக்குத் தெரியும் அதனால்தான் சிறுவயதிலேயே குழந்தைகளை மூன்றாவது மொழி கற்றுக் கொள்ள கூறுகிறோம். அண்ணன், அவர்களே.... மூன்றாவது மொழி தேவையென்றால் படித்துக் கொள்வது என்றில்லாமல், தற்போது தேவை என்பதாலேயே மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ள கூறுகிறோம்
அப்பா ஸ்டாலின், அதன் பின்னர் மகன் உதயநிதி ஸ்டாலின்.. அதற்கு பின்னர் இன்பநிதி என அப்பா.. அப்பா என இந்த ஆட்சியே அப்பப்பா என செல்கிறது. நாங்கள் என்ன செய்வோம். சாமானிய குழந்தைகள் போட்டிக்கு தயாரவதை தடுக்கின்றனர் அதற்குதான் புதிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறோம்.
மீண்டும் மீண்டும் இந்தி திணிப்பு... இந்தி திணிப்பு என்று கூறுவதை மறுக்கிறேன். இந்தி திணிப்பு இந்தி திணிப்பு என அதனைத்தான் திணித்து கொண்டு இருக்கிறீர்கள். இந்திக்காக நான் போராடவில்லை. தமிழ்நாடு பாஜகவுக்கு தமிழ் உயிர் போன்றது. தமிழுக்கு ஒரு பிரச்சினையென்றால் முதலில் உயிர் கொடுப்பது பாஜக தொண்டன்தான். கோயிலுக்கு போகமாட்டேன் எனக் கூறிவிட்டு மறைந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. இந்தி படிக்க மாட்டோம் எனக் கூறி மறைமுகமாக இந்தி படிப்பார்கள். சம்பிரதாயம் பின்பற்றமாட்டோம் என கூறிவிட்டு சமாதியில் அனைத்தையும் செய்வார்கள். வெளியில் ஒன்றை சொல்வார்கள், உள்ளே நடப்பது ஒன்று. ஆனால், பாஜக அப்படி இல்லை. வெளிப்படையாக உள்ளது.
பிரதமர் மோடி தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். வெளியுறவுத் துறை, நிதித்துறை அமைச்சர்களாகவும், ஆளுநர்களாகவும், மாநில தலைவர்களாகவும் பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்