தமிழ்நாடு

தற்காலிக அவைத்தலைவரானார் தமிழ்மகன் உசேன்... அ.தி.மு.க. தலைமை உத்தரவு...

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதை அடுத்து அதிமுக அவைத்தலைவர் பதவி காலியானது. இந்த நிலையில், அதிமுகவில் அடுத்த அவைத்தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமை தொடர் ஆலோசனை மேற்கொண்டது.

இந்த நிலையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைப்பெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் மகன் உசேன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராகவும், கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

மேலும், எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியதில் இருந்தே அதிமுகவில் இருப்பவர். ஜெயலலிதா இருந்தபோது இவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு, ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினரிடமும் சரிசமமான, நடுநிலையான போக்கை கடைப்பிடித்து வருபவர். 50 ஆண்டுகளாக அதிமுகவில் இருப்பவர் என்பதோடு, அதிமுகவின் முதல் மாவட்ட செயலாளர் தமிழ் மகன் உசேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.