தமிழ்நாடு

'சிறைவாசிகள் விடுதலை' அமைச்சர் ரகுபதியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு!

Malaimurasu Seithigal TV

சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரி மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்துள்ளார். 

இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சக இல்லத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார்.

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற மஜக-வின் கோரிக்கை தொடர்பாக அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். ஆதிநாதன் ஆணைய பரிந்துரைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்தும் இச்சந்திப்பில் விவாதித்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு இந்த மனிதாபிமான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் இதை ஜனநாயக சக்திகள் ஆர்வமுடன் எதிர்நோக்குவதாகவும் கூறினார். 

ஏற்கனவே, செப்டம்பர் 10, 2022 அன்று சென்னையில் மஜக சார்பில்  தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றுள்ளது. அது தவிர ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறை முற்றுகை, ஜூலை 09, 2023 அன்று நெல்லை மத்திய சிறை முற்றுகை, ஆகஸ்ட் 5, 2023 அன்று கடலூர் மத்திய சிறை முற்றுகை ஆகிய போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே செப்டம்பர் 15, 2023 அண்ணா பிறந்தநாளையொட்டி இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று இன்றைய சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இச்சந்திப்புக்கு பிறகு கடந்த சட்டமன்றத்தில் இருவரும்  கொண்டிருந்த தங்களது நட்புறவு குறித்து நினைவூட்டி மகிழ்ந்தனர். இச்சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் அசாருதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.

அமைச்சர் ரகுபதி, இது குறித்து கவனத்தில் கொண்டிருப்பதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் மஜத சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.