இனி விருப்பமான டாஸ்மாக் கடையில் வேலை பார்க்க முடியாது! தமிழகம் முழுவதும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம்...  
தமிழ்நாடு

இனி விருப்பமான டாஸ்மாக் கடையில் வேலை பார்க்க முடியாது! தமிழகம் முழுவதும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம்...

இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்குப் பொருந்தும். குறிப்பாக, விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களின் பணியிடங்களைச் சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரே கடையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களை வேறு கடைகளுக்கு மாற்றவும், ஆட்கள் அதிகமாக இருக்கும் கடைகளில் இருந்து பணியாளர் பற்றாக்குறை உள்ள கடைகளுக்கு ஊழியர்களை அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இனி ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான கடைகளிலேயே தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிர்வாகம், இதற்கான புதிய பணியிட மாற்றக் கொள்கையைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. 'மதுபானச் சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கான பணியிட மாற்றம் மற்றும் பணிநியமனக் கொள்கை 2026' என்ற பெயரில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற டாஸ்மாக் நிறுவனத்தின் 224-வது வாரியக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்குப் பொருந்தும். குறிப்பாக, விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களின் பணியிடங்களைச் சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் எத்தனை ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்ப பணியாளர்களைப் பிரித்து அனுப்புவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்தின் சராசரி தினசரி விற்பனையின் அடிப்படையில் 'ஏ', 'பி', 'சி' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப குறைந்தபட்சம் எத்தனை ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எந்தக் கடையில் கூடுதல் பணியாளர்கள் இருக்கிறார்கள், எந்தக் கடையில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதை மாவட்ட மேலாளர்கள் கணக்கிட வேண்டும்.

ஒரே கடையில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பணியாற்றியவர்கள் பணியிட மாற்றத்துக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். குறிப்பாக, நவம்பர் 1ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள். யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதைத் தீர்மானிக்கவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதலில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் மூத்தவர் யார் என்பது கணக்கிடப்படும். ஒரே நிலையில் இருந்தால் பிறந்த தேதி மற்றும் கல்வித் தகுதி ஆகியவை அடுத்தடுத்த அடிப்படைகளாக எடுத்துக்கொள்ளப்படும். ஒருவர் விடுப்பில் இருந்த காலம், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலம் அல்லது பணியில் இடைவெளி ஏற்பட்ட காலம் ஆகியவையும் குறிப்பிட்ட கடையில் பணியாற்றிய காலத்தைக் கணக்கிடும்போது சேர்த்துக்கொள்ளப்படும். இதனால் பணியிட மாற்றத்துக்கான தகுதியைத் தீர்மானிப்பதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறை பின்பற்றப்படும்.

இந்த நடவடிக்கையில் மாவட்ட மேலாளர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தில் உள்ள கடைகளின் பணியாளர் எண்ணிக்கையை ஆய்வு செய்து, கூடுதல் ஊழியர்களைத் தேவையுள்ள கடைகளுக்கு மாற்ற வேண்டும். மாவட்ட மேலாளர் எடுக்கும் பணியிட மாற்ற முடிவே இறுதியானதாக இருக்கும். ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான கடையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. குறிப்பிட்ட விதிவிலக்கான சூழல்களில் மட்டும் சம்பந்தப்பட்ட மூத்த மண்டல மேலாளரின் முன் அனுமதியுடன் அதே கடையில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

மாவட்டக் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் அல்லாத பிற இடங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களையும் மீண்டும் கடைகளுக்கு அழைத்து வர டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறை உள்ள கடைகளில் இவர்களைப் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணிகள் அனைத்தையும் முடிப்பதற்குக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதிக்குள் கடைகளின் வகைப்பாடு மற்றும் பணியாளர் கணக்கெடுப்பை முடிக்க வேண்டும். நவம்பர் 25ஆம் தேதிக்குள் பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பித்து, ஊழியர்கள் புதிய இடங்களில் பணியில் சேர வேண்டும். தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதிக்குள் மாவட்ட மேலாளர்கள் தங்களது அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைந்த அறிக்கையும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தைச் சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கடைக்கும் தேவையான பணியாளர்களின் எண்ணிக்கை, தற்போது உள்ள ஊழியர்கள், மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றங்கள், சிறப்பு அனுமதியுடன் அதே இடத்தில் தொடரும் ஊழியர்கள் உள்ளிட்ட விவரங்களும் அறிக்கையில் இடம்பெற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் குறைவான ஊழியர்களுடன் செயல்படும் கடைகள் இருந்தால், அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். இந்தப் புதிய நடைமுறை மூலம் ஒரே இடத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றும் ஊழியர்களின் பணியிடங்கள் மாற்றப்படுவதுடன், கடைகளுக்கு இடையிலான பணியாளர் பற்றாக்குறையையும் சரிசெய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த உத்தரவு எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்