தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று 50,000 இடங்களில் 14-வது மெகா தடுப்பூசி முகாம்..!

10.38 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என தகவல்..!

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் 1 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தற்போது வரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 2 கோடியே 43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் இதுவரை 10 லட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.