தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம்.. இதே போல் பள்ளியில் 7 சம்பவங்கள் நடந்ததாக அதிர்ச்சி தகவல்!!

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அப்பள்ளியில் இதுபோல்  7 சம்பவங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Suaif Arsath

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், கடலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி பிளஸ் 2 படித்து வந்தார்.

இவர் கடந்த 13ம் தேதி  உயிரிழந்ததை அடுத்து, அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் பள்ளி பேருந்துகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தி, பள்ளி கட்டடத்தை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், அப்பள்ளியில் இதுபோல் 7 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த 10 ஆண்டு காலத்தில் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்து மாணவர்கள் உயிரிழப்புக்கான காரணம் சரிவர தெரியவில்லை.

இதனிடையே  போராட்டக்காரர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம்’ என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, ஒரே நாளில் ஆயிரம் பேர் இணைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இதனிடையே மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தலைமை கல்வி அலுவலர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.