தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி...தவிக்கும் 2 குட்டி யானைகள்...அவசர வழக்காக நீதிமன்றம் விசாரணை!

Tamil Selvi Selvakumar

தருமபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியான சம்பவம் தொடர்பான முறையீட்டை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு குட்டி யானைகளை பாதுகாக்க கோரி வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிக்கிறது.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர், தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், கேழ்வரகு, தென்னை போன்றவற்றை சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி ஆகியவற்றால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதால், விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து உள்ளார்.

நேற்றிரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி யானைகள் உள்ளிட்ட 5 காட்டு யானைகள் தண்ணீர், உணவு தேடி முருகேசனின் தோட்டத்திற்குள் புகுந்த்தபோது, விளைநிலத்தில் இருந்த மின் வேலியில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை ஆகியவை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

உயிர் தப்பிய குட்டி யானைகள் உயிரிழந்த யானைகளின் சடலத்தை சுற்றி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நில உரிமையாளர் முருகேசனிடம் பாலக்கோடு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் உயிர் தப்பிய இரண்டு குட்டி யானைகளை, பாதுகாத்து காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று பிற்பகலில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.