தமிழ்நாடு

விடுதலை பெற்ற முன்னாள் சிறைவாசிகளுக்கு...உதவித் தொகை வழங்கினார் முதலமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

சிறையிலிருந்து விடுதலை பெற்ற முன்னாள் சிறைவாசிகளுக்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கம் சார்பில் விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விடுதலை பெற்ற முன்னாள் சிறைவாசிகள் சிலருக்கு உதவி தொகை 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைவாசிகள் 6 மணிக்கு சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னதாக விளையாட்டு பயிற்சிகளை அளித்திட தேவையான உபகரணங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். வரும் ஆண்டுகளில் விடுதலையாகும் சிறைவாசிகளுக்கு, சிறைகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், சிறைவாசிகள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் 70 ஆயிரம் இலவச புத்தகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அனைத்து மத்திய சிறு நூலகங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் சிறைவாசிகள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிறைவாசிகள் திருந்தி வாழும் இடமாக சிறைச்சாலைகள் அமைந்திருப்பதாக கூறினார்.

மேலும், இந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சிறைத்துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.