செங்கல்பட்டு: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் "சமத்துவ கிறிஸ்துமஸ் விழா" வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவில் பங்கேற்கத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, யாருக்கெல்லாம் செல்போனில் 'கியூ.ஆர் கோடு' (QR Code) அனுப்பப்பட்டதோ, அவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அரங்கிற்குள் செல்ல முடிந்தது. சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் இந்த முறையில் பங்கேற்றனர்.
மேடையில் கத்தோலிக்க திருச்சபை, சி.எஸ்.ஐ (CSI), மற்றும் சுயாதீன சபைகள் (Independent Churches) என பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சார்ந்த போதகர்கள் பாகுபாடின்றி ஒரே மேடையில் அமரவைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விஜய் தனித்தனியாக மரியாதை செலுத்தினார். இது விழாவின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது.
அரசியல் உறுதிமொழி: கிறிஸ்தவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளைத் தற்போதைய அரசு நிறைவேற்றவில்லை என்ற கருத்து விழாவில் முன்வைக்கப்பட்டது. த.வெ.க ஆட்சிக்கு வந்தால், இந்தச் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.