தூத்துக்குடி மாவட்டம் தஸ்நேவிஸ் நகரைச் சார்ந்த சகிமா கடந்த 2021-ம் ஆண்டு திருநங்கையாக மாறியுள்ளார்.இவருக்கு பெற்றோர் யாரும் கிடையாது, உடன் பிறந்த ஒரு சகோதரியும் ஒரு தம்பியும் இருந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் படித்து வருகின்றனர். சகிமா திருநங்கையாக மாறிய பின்பு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.
மேலும் நிரந்தர வேலை வேண்டி பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தும் தற்போது வரை எந்தவித நிரந்தர பணியும் கிடைக்காமல் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். மேலும் உடன் உள்ள திருநங்கைகள் சாதிய ரீதியாக இவரை ஒதுக்கி வைத்ததால் மனவேதனை அடைந்துள்ளார். இருந்தாலும் இவர் எந்த கடைக்கு சென்றாலும் இவரை பின்தொடர்ந்து தொந்தரவு செய்வதையும் வசூல் செய்யும் பணத்தில் கமிஷன் கேட்பதையும் சக திருநங்கைகள் வழக்கமாக வைத்துள்ளனர் என கூறிய அவர் “கடந்த 23.7.2025 அன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் மதுபான கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வரக்கூடிய பொது மக்களிடம் வயிற்று பிழப்பிற்காக உதவி தேவை கேட்டு நின்று கொண்டிருந்த போது ரீமா என்ற திருநங்கை தலைமையில் வந்த திருநங்கைகள் “உன்னை ஊருக்குள் விட்டதே தப்பு. அதை மீறி எந்த இடத்தில் வந்து வசூல் செய்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா?” எனக் கூறி அடித்தார் மேலும் காவல்துறையினர் விரைந்து வந்து எங்களை சமாதானப்படுத்தி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சொல்லி என்னை அனுப்பி வைத்தனர். உடனே நான் தூத்துக்குடி வட பாகம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வாய்மொழியாக புகார் மனு அளித்தேன். ஆனால் காவல் நிலையத்தில் இருந்த காவலர் என் விபரங்களை எழுதி வாங்கிவிட்டு காலை நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டிற்கு போக சொன்னார். மறுநாள் 24/7/2025 அன்று காலை சுமார் 11 மணியளவில் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன் அப்போது காவல் நிலையத்தில் வளாகத்தில் திருநங்கை ரீமா தலைமையில் 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நின்று கொண்டிருந்தனர்.
மேலும் அதை காவல் நிலையத்தில் வைத்து திருநங்கை ரீமா தூண்டுதலின் பேரில் சக திருநங்கைகள் என்னை அடித்து உடையை கிழித்து மானபங்கம் செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன்” என அவர் தெரிவித்தார்.
இப்படி காலந்தோறும் திருநங்கைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.வீட்டிலும் வெளியிலும், சமுதாயத்திலும் ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராகவே இருக்கிறார்கள் திருநங்கைகள். சம்பீத்தில் கூட ஒரு திருநங்கையை அவரது தம்பியே வெட்டிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு மேலும் திருநங்கைகளின் வாழ்வை சீரமைக்க முயலாவிட்டால், அவர்களின் நிலை இன்னமும் மோசமாகிவிடும். அரசு நிச்சயம் அவர்களின் வாழ்வாதாரத்தை, வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.