தமிழ்நாடு

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Tamil Selvi Selvakumar

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான இது இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். 

அதாவது ஓபன் பிரிவில் 189 அணிகளும்,பெண்கள் பிரிவில் 154 அணிகளும் என மொத்தம் 343 அணிகள் கலந்து கொள்கின்றன. செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளில் இருந்து இத்தனை அணிகள் பங்கேற்க இருப்பது எண்ணிக்கையில் புதிய சாதனையாகும். உலக அளவில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளதால், போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு 92 கோடி ரூபாய் நிதியை ஏற்கெனவே ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில், பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், மேலும் கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான மொத்த செலவையும் தமிழக அரசே ஏற்கிறது.