தமிழ்நாடு

மீண்டும் 50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு அரசாணை... இனி 100 கோடியில் செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்டம்!!

தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கு மேலும் 50 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tamil Selvi Selvakumar

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதிகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அதன்படி, இத்திட்டத்திற்கு, முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. 

இந்நிலையில், மீதம் உள்ள 50 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நமக்கு நாமே திட்டப் பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகை மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

நமக்கு நாமே திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகளையும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டடங்களையும் இத்திட்டத்தில் கட்டிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலங்கள் கட்டுதல், சாலைகளை தரம் உயர்த்துதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளையும் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.