தமிழ்நாடு

”ஆளுநர் மசோதாக்களை படித்து கூட பார்ப்பதில்லை” - சபாநாயகர் அப்பாவு

Tamil Selvi Selvakumar

தமிழக சட்டமன்றம், அமைச்சரவை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை, ஆளுநர் ஆர்.என். ரவி படித்து பார்ப்பது கூட கிடையாது என சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக  சபாநாயகர் அப்பாவு  தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் உத்தரவின்படி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் வட்டாரங்களில் உள்ள 5780 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என்றும் கூறினார். 

மேலும், 03.11.2023 முதல் 31.03.2024 வரை மொத்தம் 150 நாட்களுக்கு 100 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவரிடம், தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழக சட்டமன்றம் மற்றும் அமைச்சரவை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அந்த மசோதாக்களை படித்து கூட பார்ப்பது கிடையாது என குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளை பட்டியலிட்டு சபாநாயகர் அப்பாவு விமர்சித்தார்.