தமிழ்நாடு

மாணவி உடலை பெற கெடு வைத்த நீதிபதி - உயர்நீதிமன்றம் அதிரடி..!

Tamil Selvi Selvakumar

கள்ளக்குறிச்சி பள்ளியில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை நாளை மதியம் 12  மணிக்குள் பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாணவி மரணம்:

கள்ளக்குறிச்சி கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13 ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டு மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டார்.

மாணவியின் உடலை பெற்றோர் வாங்கவில்லை:

மாணவியின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் உடலை வாங்க பெற்றோர் வராததால் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகின்ற நிலையில், இதுவரை மாணவியின் உடலை வாங்க பெற்றோர் முன்வரவில்லை. இதையடுத்து மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

காவல்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை:

காவல்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மறுஉடல்கூராய்வு பரிசோதனையில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என தடயவியல் நிபுணர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதனைத்தொடர்ந்து தகுதியான மருத்துவர்களை கொண்டு தான் பிரேத பரிசோதனை நடைபெற்றதாக கூறிய நீதிபதி, நீதிமன்றம் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? என பெற்றோர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். 
 
மேலும், 10 நாட்களுக்கு மேலாக இறந்த மாணவியின் உடலை  வாங்காமல் வைத்துள்ளீர்களே என மாணவியின் தரப்பு வழக்கறிஞரிடம் அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, மாணவியின் உடலை வைத்து அரசிடம் பந்தயம் கட்டுகிறீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தில் தான் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என நீதிபதி  திட்டவட்டமாக குறிப்பிட்டார். 

ஜிப்மர் மருத்துமனை ஆய்வு செய்ய உத்தரவு:

தொடர்ந்து, மாணவியின் பிரேத பரிசோதனையின் அறிக்கை, வீடியோவை புதுச்சேரி  ஜிப்மர் மருத்துமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நாளை மதியம் 12 மணிக்குள் பெற்றோர் உடலை வாங்காவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தார். அத்துடன் மாணவியின்  இறுதி சடங்கை அமைதியாக நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

வேதனை தெரிவித்த நீதிபதி: 

முன்னதாக மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வெடித்த கலவரத்தால் 4,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.