தமிழ்நாடு

மாலை முரசு செய்தி எதிரொலி: உடனடியாக நடவடிக்கை எடுத்த மருத்துவமனை நிர்வாகம்!

Tamil Selvi Selvakumar

மாலை முரசு தொலைகாட்சி செய்தி எதிரொலியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டதால் நோயாளிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரபரப்புடன் காணப்படும் மருத்துவமனை:

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வருகை தருகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக இங்கு சிகிச்சை பெறுகின்றனா். எலும்பு முறிவு, இருதய பரிசோதனை, அவசர சிகிச்சை உள்ளிட்ட 26 பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

மருத்துவ கழிவுகள்:

ஆனால், சிகிச்சைக்கு பிறகு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி, நேற்று முன்தினம் நமது மாலை முரசு தொலைக்காட்சியில் பிரத்யேகமாக ஒளிபரப்பானது.

மாலைமுரசு எதிரொலி:

மாலைமுரசு செய்தி எதிரொலியாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பிணவறை அருகே கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

இதனிடையே, மருத்துவக் கழிவுகளை அகற்றுவது குறித்து செய்தி வெளியிட்டு சுகாதார பிரச்சனைக்கு தீர்வுகாண உதவிய மாலை முரசு தொலைக்காட்சிக்கு நோயாளிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.