தமிழ்நாடு

சிலை கடத்தல் பிரிவு போலீசார்களின் பலே ஐடியா...! வசமாக சிக்கிய கடத்தல்காரர்கள்...!

Malaimurasu Seithigal TV

தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் என கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலை வாங்குவது போல சிலை கடத்தல்காரர்களிடம் பேசி சிலையை கோயம்புத்தூர் பகுதிக்கு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய சிலை கடத்தல்காரர்கள் சிலையுடன் கோவையிலிருந்து பல்லடம் செல்லும் நெடுஞ்சாலையில் காரில் காத்திருந்த போது, பதுங்கி இருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் காரில் சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோக சிலை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.  இதனையடுத்து  சிலையை கொண்டு வந்த கேரளா பாலக்காட்டை சேர்ந்த  சிவபிரசாத் நம்பூதிரி(53) மற்றும் கார் ஓட்டுனரான மேட்டூரை சேர்ந்த ஜெயந்த்(22) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் பிடிப்பட்ட சிலைகளுக்குண்டான எந்த ஆவணங்களும் இவர்களிடம் இல்லாததால் சிலையை பறிமுதல் செய்த போலீசார், எந்த கோவிலிருந்து சிலைகள் திருடப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலையின் தொன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.