ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், மாநில அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும், அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம் என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் எனவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.