தமிழ்நாடு

புதுச்சேரியில் பாஜக சார்பில் இடம் பெறும் அமைச்சர்கள் பட்டியல் தயார்: ஒரு மாதமாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது

புதுச்சேரியில்  அமைச்சர்கள் பங்கீடு குறித்து முதலமைச்சர் ரங்கசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி நடத்திய பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் இடம் பெறும் அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்., - பா.ஜ.க, கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி கடந்த மாதம் ஏழாம் தேதி பதவியேற்றார். இரு கட்சிகளும் சபாநாயகர் பதவி, அமைச்சர் பதவிகளை பங்கிட்டுக் கொள்வதில், ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்தது.

இரு கட்சி பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு பேசினார். அதையடுத்து, பதவி பங்கீட்டில் சுமூக தீர்வு ஏற்பட்டது. அதில், என்.ஆர். காங்., கட்சிக்கு 3 அமைச்சர் பதவி, துணை சபாநாயகர் பதவியும், பா.ஜ.க-வுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகள் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.  

இதனையடுத்து பாஜக நிர்வாகிகளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, அமைச்சரவையில் இடபெறக்கூடிய  இரண்டு பாஜக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் குறித்த பெயர் பட்டியலை கொடுத்து ரங்கசாமியுடன் ராஜூவ் சந்திரசேகர் எம்.பி. விவாதித்து இறுதி செய்தனர்.

இதில் அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் மற்றும் சபாநாயகராக செல்வம் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது. புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பதில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து வரும் 14ந்தேதி அமைச்சரவை பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.