தமிழ்நாடு

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல்...! உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்...!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன்  மூலமாக நடத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் தொடர்ந்துள்ள வழக்கு மனுவில், மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு மருத்துவர்கள் என்றும், நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்குடைய சில அரசு மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர் என மனுவில் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், மருத்துவ கவுன்சில் வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவரிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம் போல் அதை பயன்படுத்தி வருவதாகவும், கடந்த மூன்று தேர்தல்களில் இதே நடைமுறையை பின்பற்றி தகுதியான வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டு நடைமுறை முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதால், ஜனவரி 19ஆம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.