தமிழ்நாடு

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு; தனிச் சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

Malaimurasu Seithigal TV

அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை செயல்படுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றக் கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

சமீபத்தில் உச்சநீதிமன்றம், அரசு பணிகளில் பதவி உயர்வின் போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றக் கூடாது என கூறியுள்ளது. இதனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகத்தில் பின் தங்கிய மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் எனவும், இதற்காக தனிச்சட்டம் தமிழ் நாடு சட்டப்பேரவையில் உருவாக்கப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது. 

இதுத் தொடர்பாக அக்கட்டசியின் மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதி மன்றத்தின் இந்த தீரப்பு இந்திய அரசியல் சாசன சட்ட சரத்து 16(4)படி பதவி உயர்வில், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்துள்ளதை நிராகரிப்பதாக சாட்டியுள்ளது. 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ளோருக்கான பதவி உயர்வு நேரங்களில் முன்னுரிமை வாய்ப்பை கைவிடும் போது, சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினர் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும் என குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை,  இட ஒதுக்கீடு கொள்கை மூலம் பட்டியலின மற்றும் பழங்குடி மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், உள்ஒதுக்கீடு மூலம் பயன்பெறும் ஆதரவற்ற விதவை, மாற்று திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தமிழ்வழி பயின்றோர் ஆகியோர் தற்போது அனுபவித்து வரும் முன்னுரிமை வாய்ப்பினை இழக்கும் நிலை உருவாகும் என எச்சரித்துள்ளது.
 
எனவே, தமிழ்நாடு அரசு பதவி உயர்வுகளில் பின்பற்றப்படும் தற்போதைய நடைமுறை தொடருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதற்காக தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.