தமிழ்நாடு

தி.மு.க. நகரச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கட்சிப் பிரமுகர்... கைது செய்யக் கோரி சாலை மறியல்...

திருநாகேஸ்வரத்தில் திமுக செயலாளர் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் உள்ளிட்ட கும்பலை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரம் திமுக நகர செயலாளராக இருப்பவர் தாமரைச்செல்வன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மண்ணை தனசேகரன் என்பவருக்கும் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மண்ணை தனசேகரன் உள்ளிட்ட ஒரு கும்பல் தாமரைச் செல்வன் வீட்டிற்கு சென்று அரிவாள் கட்டையுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அறிந்த திமுகவினர் தாமரைச்செல்வன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணை தனசேகரன் வீட்டு முன்பு கும்பகோணம் காரைக்கால் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிச்செல்வன் உள்ளிட்ட போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் திமுகவினர் கலைந்து சென்றனர்.