சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்து கொள்ளையடித்த குற்றவாளியை இன்று காலை போலீசார் சங்ககிரி அருகே கைது செய்துள்ளனர்.
கடந்த (மே 20) அன்று தீவட்டிப்பட்டி அருகே சரஸ்வதி என்ற வயதான மூதாட்டியை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கொடூரமாக கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில் குற்றவாளியை குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சேலம் சங்ககிரி மலைப்பகுதியின் அடிவாரத்தில் பதுங்கியிருந்த நரேஷை பிடிக்க சென்ற போது நரேஷ் அறிவால் மற்றும் கத்திகளை பயன்படுத்தி போலீசாரை தாக்கியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து கத்தியை போட்டுவிட்டு சரணடைய கூறிய மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர், நரேஷ் தொடர்ந்து தாக்கியதால் அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளார். நரேஷ் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லூர் பகுதியில் வயதான பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கிலும் இவர்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள போலீசார், நரேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் வயதான ஆடு மாடு மேய்க்கும் பெண்களையும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளையும் குறிவைத்து கொடூரமாக தாக்கி கொள்ளை அடிக்கும் வழக்கம் கொண்டவர் என்றும். ஏற்கனவே இவர் மீது போலீசாரை கொலை மிரட்டல் விடுத்த வழக்கும், நீதிமன்றத்திற்கு வழிகாவல் செய்த போலீசாரை மிரட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்