தமிழ்நாடு

ஆயுத பூஜையொட்டி பூக்கள் மற்றும் பழங்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு...

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூக்கள் மற்றும் பழங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. 

Malaimurasu Seithigal TV

சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி  அண்ணா பூ வணிக வளாகத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, 60 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ மல்லிகைப் பூ 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 400 ரூபாய்க்கும்,ரோஜா மலர்கள் 200 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.  

இதேபோன்று  நிலக்கோட்டை மலர் சந்தையில், பண்டிகையையொட்டி 200 டன் மலர்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆயுத பூஜையையொட்டி ஏராளமமான, வியாபாரிகள் குவிந்ததால், பூக்களின் விலை  அதிகரித்து காணப்பட்ட நிலையிலும், ஒரே நாளில், 200 டன் பூக்கள் விற்பனை ஆனதால், பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள மகிழ்ச்சி அடைந்தனர். 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், வளையப்பட்டி, மோகனூர், புதுப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்தனர். பூக்கள் விலை அதிகரித்திருந்த போதிலும் சிறு வியாபாரிகள், போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதேபோன்று, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் சந்தையில் பூக்களின் வரத்து  அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஒருவாரமாக பூக்களின் விலை குறைந்திருந்த நிலையில், ஆயுத பூஜை பண்டிகையையொட்டி விலை அதிகரித்து காணப்பட்டது.