தமிழ்நாடு

30 ஆண்டுகளாக பயன்படுத்தும் சாலை.. திடீரென வளைத்து போட்டு வேலி அமைத்த தனி நபர்!!... மீட்டுத்தர அரசுக்கு மக்கள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிராமபுற சாலையை மீட்டுத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Malaimurasu Seithigal TV

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தையும், நாகக்குடையான் கிராமத்தை இணைக்கும் சாலையை சுமார் 30 ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

9 அடி அகலம் கொண்ட இந்த சாலை வழியாக, வாகன போக்குவரத்து மற்றும் விவசாயிகள் இடுபொருட்களை  கொண்டு  செல்லவும், பள்ளி மாணவ, மாணவியர் சென்றுவரவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கிராமப்புற சாலையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார். இதனால் தற்போது இந்த சாலையில்,  நடந்து மட்டுமே செல்லக் கூடிய அளவிற்கு,  சாலை குறுகி விட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் இடு பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறும் அப்பகுதி மக்கள், கிராமபுற சாலையை மீட்டுத்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.