தமிழ்நாடு

மீண்டும் ஆஜரான அமைச்சர் பொன்முடி...2-வது நாள் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

Tamil Selvi Selvakumar

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை நடத்திய இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது. 

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், திமுக எம்பியுமான கவுதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.

அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருவரும் விசாரணைக்காக மீண்டும் ஆஜராகினர். 

அப்போது, சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்கப் பணம் மற்றும் தரவுகளின் அடிப்படையில், சுமார் 6 மணி நேரமாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியிடம் அமலாக்கத்துறை நடத்திய இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்தது.

மீண்டும் ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி எம்.பி. ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.