தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்திற்குள் நடத்தி முடிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்திற்குள் நடத்தி முடிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் நகர்ப்புற தேர்தலை நடத்த கூடுதலாக 7 மாத கால அவகாசம் வழங்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. 

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலை நடத்த முடியும்போது, உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்த முடியவில்லை என நீதிபதிகள் கடுமை காட்டினர். இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபணை இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

இதேபோல் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் நடத்த கூடுதல் கால அவகாசம் அவசியம் என பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டது. அதில், கொரோனா நிலவரம், பருவ மழை, உள்ளாட்சி தேர்தல் பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கு இரண்டரை மாதம் தேவை உள்ளிட்டவை  சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 
 
இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, இறுதியாக 4 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இதனால் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.