தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஆக்ரோஷமாக நடந்த வாக்குவாதங்களில் கவனம் பெற்றார் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன்.
இஸ்லாமியர் பிரச்சினை விவாதிக்கப்பட்டபோது, திமுக மற்றும் தவெக இடையே மோதல் போக்கு நிலவிய நிலையில், தனது இருக்கையில் இருந்து எழுந்து தவெக எம்.எல்.ஏ.க்களை நோக்கி சீறிச் சென்றார். பின்னர் நேரடியாக சபாநாயகர் அருகே சென்று, கேமரா பதிவில் நடந்ததைப் பார்க்குமாறு வலியுறுத்தினார்.
திமுகவினர் பூண்டி கலைவாணனின் வீடியோக்களை எடிட் செய்து, "OG DMK IS BACK" என இணையத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர். உண்மையாகவே இது வெறும் பில்டப் அல்ல. கடந்த தேர்தலின்போது, "இவரை மீறி திருவாரூரில் எந்த அணியிலும் வாலாட்ட முடியாது" என திமுகவினர் சவால் விட்டனர். சொன்னபடியே திருவாரூரில் வென்று காட்டினார். அவரது செல்வாக்கு அப்படிப்பட்டது.
யார் இந்த பூண்டி கலைவாணன்? இவரது கதை என்ன என்பதை Gen z களும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு!
கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில், திமுகவுக்கு நெருக்கமான குடும்பத்தில் பிறந்தவர் பூண்டி கலைவாணன். இவரது அண்ணன் பூண்டி கலைசெல்வன் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். கருணாநிதிக்கு நெருக்கமான தளபதியாகவும் இருந்தார்!
எப்போதும் இளைஞர்கள் சூழ, பலத்த பாதுகாப்புடன் வலம் வருபவர் கலைசெல்வன். 2004-ம் ஆண்டு கொரடாச்சேரியில் நடந்த அதிமுக பிரமுகர் கோவி சம்பத் கொலை வழக்கில் கலைசெல்வன் முதல் குற்றவாளியாக இருந்தார். அப்போது முதலே இருதரப்புக்கும் இடையிலான பகை தொடர்ந்தது.
திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு டெண்டர் கூட பூண்டி கலைசெல்வனைத் தாண்டிச் செல்லாத அளவுக்கு கட்டி ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகரித்தனர்.
2007-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டமே நடுங்கும் வகையில், ஒரு கும்பல் கலைசெல்வனை கொலை செய்தது.
கலைசெல்வன் கொலையால் கொதித்தெழுந்த திமுக தொண்டர்கள், பேருந்துகளை எரித்தனர். கொலையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட அதிமுகவினரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். திருவாரூரே கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நெருப்பில் உருவானவர் பூண்டி கலைவாணன்.
கலைசெல்வனின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் திமுகவின் உள்ளூர் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புதிய மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பூண்டி கலைவாணனின் வாழ்க்கையில் இந்த நாட்கள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தளபதியாக இருந்து தொகுதியைப் பார்த்துக்கொண்டவர் பூண்டி கலைவாணன்.
2019-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது மகன் மு.க. ஸ்டாலின்தான் போட்டியிடுவார் என்றும், கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலின்தான் வர வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்தன.
ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பூண்டி கலைவாணன் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். கலைஞரின் தொகுதியில் எம்எல்ஏ ஆனார். அதை காலவாணனின் தொகுதியாக மாற்றினார்.
ஆரம்ப காலம் முதலே திருவாரூர் திமுகவுக்கு மிக முக்கியமான மாவட்டமாகும். அங்கே கலைசெல்வன் கட்டிக் காப்பாற்றிய உள்ளூர் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, திருவாரூரில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் கலைவாணன். இதற்காக அவர் கொடுத்த விலை பெரிது.
2019-ம் ஆண்டைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கலைவாணன் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.
பூண்டி கலைவாணனின் அரசியல் பயணம் திமுக கட்சியின் உள்ளூர் அமைப்புப் பணிகளுடன் தொடங்கியது. இப்போது சட்டமன்றத்தில் தனித்து தெரியும் தலைவராக வளர்ந்துள்ளார்.
ஒரு கொலையால் அரசியல் தலைவரான இவருக்கு எதிர்மறையான முகமும் உள்ளது. மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற காலத்தில், அதிமுகவினர் மீதான வன்முறைச் சம்பவங்களால் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் சிறையில் இருந்த அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இப்போதும் 49 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஆதரவாளர்கள் படையைத் தாண்டி, திருவாரூரில் அணுவும் அசையாது எனக் கூறப்படுகிறது.
பூண்டி கலைவாணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் உள்ளன. அவர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளன.
தற்போதும் திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. இதனை எதிர்த்துக் கேள்வி எழுப்புபவர்களைச் சமாளிக்க ஆள் பலமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார் கலைவாணன். ஏனென்றால், தலைமையில் இருக்கும் குடும்பத்துக்கும் அவருக்குமான பந்தம் அப்படிப்பட்டது. தீவிர விசுவாசியாக தன்னை நிரூபித்துள்ளார். திமுக கட்சியை மறுகட்டமைப்பு செய்து வரும் சூழலில், அவருக்கு புதிய மாநிலப் பதவிகள் வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.