தமிழ்நாடு

வந்தவாசியில் தீவிரமடையும் விநாயகர் சிலை செய்யும் பணி...!

வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி யொட்டி விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்..!

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை மும்முரமாக செய்து வருகின்றனர். ஐந்து முக விநாயகர், விஷ்ணு விநாயகர், மயில் வாகன விநாயகர், சல்யூட் அடிக்கும் விநாயகர் உள்ளிட்ட  பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயார் செய்து வருகின்றனர். தற்போது 3 அடி முதல் 15 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. இந்த சிலைகள் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, விநாயகர் சிலைகள் தண்ணீரில் எளிதாக கரைக்கும் வகையிலும், நீர் மாசுபடாமல் இருக்க பேப்பர் கூழ் கொண்டு சிற்பக் கலைஞர்கள் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.