தேனி மாவட்டம், தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் ஒன்றாகத் தப்பிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிப் பின்னர் சரணடைந்த கைதி மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறையில் அதிகாரிகள் தங்களைச் சித்திரவதை செய்ததாகவும், தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகவும் அவர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார். சிறைக்குள் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நீதிபதியிடம் நேரடியாகத் தெரிவித்து, பின்னர் மீண்டும் சரணடைவதே தங்களது திட்டமாக இருந்ததாக மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் சமீபத்தில்தான் திருமணம் செய்துகொண்டதாகவும், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதால் திருந்தி வாழ விரும்புவதாகவும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும், போலீசார் தன்னைச் சுட்டுப் பிடிக்கப் போவதாகக் கூறப்பட்ட தகவலால் உயிருக்கு அஞ்சி சிறையிலிருந்து தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 17 கைதிகளும் இணைந்து திட்டமிட்டே சிறையிலிருந்து தப்பியதாகக் கூறியுள்ள அவர், இந்தச் சம்பவத்தில் தன்னையும் தனது தம்பியையும் மட்டும் முக்கியக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயற்சி நடப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். தங்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து முதலமைச்சரும் நீதிபதியும் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, சிறையில் தனது மகன் உள்ளிட்ட கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாகவும், உணவில் புழுக்கள் காணப்பட்டதாகவும் மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதியின் தாயார் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். சிறையில் வழங்கப்பட்ட உணவு குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த கைதிகளை, சிறை அலுவலர்கள் கடுமையாகத் தாக்கி தனிமைச் சிறையில் அடைத்ததாகவும், இதுவே அவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முக்கியக் காரணமாக அமைந்ததாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் பொருட்களைச் சிறை அலுவலர்கள் பறித்துக்கொள்வதாகவும், உறவினர்களுடனான நேர்காணலுக்கு அனுமதி வழங்குவதற்காகச் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து தப்பியோடியது தவறு என்பதை உணர்ந்து மீனாட்சி சுந்தரம் தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் மீண்டும் தேனி சிறையில் அடைக்கப்பட்டபோது சிறைக் காவலர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியதாக அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் மகனின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், தப்பியோடிய கைதிகளில் 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கைதிகளில் ஒருவரான கல்யாணசுந்தரத்தின் மனைவிக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட குடும்பக் காரணங்களால் சிறையிலிருந்து தப்பும் சம்பவம் அரங்கேறியதாக டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், சிறையில் கைதிகள் தாக்கப்படுவதாகவும், உணவு மற்றும் அடிப்படை வசதிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் எழுந்துள்ள புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சிறையில் காயமடைந்துள்ளதாகக் கூறப்படும் தனது மகனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதியின் தாயார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மீனாட்சி சுந்தரம் “நாங்க தப்பிச்சது இங்க நடக்கிறதா நீதிபதி கிட்ட சொல்லி சரணடைய தான் வேறு எந்த நோக்கமும் இல்லை.. என்னை சுட்டு பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. எனக்கு இப்போ தான் கல்யாணம் ஆச்சு பொண்டாட்டி கர்ப்பமா இருக்க நான் வாழ ஆசைப்படுறேன்” என கூறிய வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிறைக்குள் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.