தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

2வது முறையாக இளைஞரணி செயலாளர் ஆன உதயநிதி:

சமீபத்தில் நடைபெற்று முடிந்த திமுக உட்கட்சித் தேர்தலில், தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.  அதுமட்டுமல்லாமல், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

முதலமைச்சர் தான் முடிவு செய்வார்:

இதற்கிடையில் நடைபெற்ற உதயநிதியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், “உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா” என உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என உதயநிதி தெரிவித்தார்.

அமைச்சராவது உறுதி:

இந்த நிலையில்  மீண்டும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக போகிறார் என்ற பேச்சு தொடங்கியுள்ளது. ஒரு நல்ல நாளில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன்படி, வருகிற 14-ந்தேதி அல்லது சனிப்பெயர்ச்சிக்கு பிறகு உதயநிதி அமைச்சராவது உறுதி என்று தகவல் வெளியாகி வருகிறது.

அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம்:

அதுமட்டுமின்றி, சிலருக்கு புதிதாக அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சாத்தூர் ராமச்சந்திரன், சி.வி.கணேசன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்துக்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.