there is no last bench method 
தமிழ்நாடு

இனி பள்ளிகளில் 'கடைசி பெஞ்ச்' கிடையாது: “இது புதுசா இருக்கண்ணனே” பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

"அனைத்து மாணவர்களும் முதல் வரிசையில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வைப் பெறுவார்கள். இதன் மூலம்...

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், வகுப்பறைச் சூழலை ஜனநாயகப்படுத்தவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, இனி வகுப்பறைகளில் மாணவர்கள் அமரும் முறை, பாரம்பரிய வரிசை முறைக்கு பதிலாக, 'ப' வடிவில் (U-shape) அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'கடைசி பெஞ்ச் மாணவர்கள்' என்ற பாகுபாட்டைக் களையும் நோக்கில் இந்த அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை (ந.க.எண். 0043/M/S1/2025) அனுப்பியுள்ளார். அதில், வகுப்பறைகளில் சிறந்த இருக்கை அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் கற்றலை மேம்படுத்துவது, மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது மற்றும் சௌகரியமான சூழலை உருவாக்குவது ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

'கற்றல் என்பது ஏற்பாட்டில் இருந்து தொடங்குகிறது - 'ப' வடிவ அமைப்பு திறந்த மனங்களுக்கான தளத்தை உருவாக்குகிறது'" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமாக, மாணவர்கள் வரிசையாக அமரும் முறையில், அவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் குறைவாக இருப்பதாகவும், கடைசி வரிசையில் உள்ள மாணவர்கள் ஆசிரியரின் முழுமையான கவனத்தைப் பெற முடியாத நிலை இருப்பதாகவும் அந்தச் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் குறைகளைக் களையும் வகையில், 'ப' வடிவ இருக்கை அமைப்பு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம், அனைத்து மாணவர்களும் ஆசிரியரையும், கரும்பலகையையும் தெளிவாகப் பார்க்க முடியும். அதே நேரத்தில், மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பேசவும், கலந்துரையாடவும், குழுவாகச் செயல்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது கற்றலை ஒரு விரிவுரையாக அல்லாமல், ஓர் உரையாடலாக மாற்றுகிறது.

ஆசிரியர் எளிதாக வகுப்பின் மையப்பகுதிக்குச் சென்று அனைத்து மாணவர்களையும் எளிதில் கண்காணிக்கவும், அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் உதவவும் இந்த அமைப்பு வழிவகுக்கிறது. கூச்ச சுபாவமுள்ள அல்லது அமைதியான மாணவர்கள் கூட, இந்த வட்ட வடிவ அமைப்பில் தங்களை தனிமைப்படுத்தப்பட்டதாக உணரமாட்டார்கள், கற்றலில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என நம்பப்படுகிறது.

இந்த புதிய முறை, வகுப்பறையில் நிலவும் படிநிலை உணர்வைக் குறைத்து, அனைவரும் சமம் என்ற மரியாதைக்குரிய சூழலை உருவாக்கும். "அனைத்து மாணவர்களும் முதல் வரிசையில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வைப் பெறுவார்கள். இதன் மூலம், யாரும் மறைந்துகொள்ள முடியாத, அனைவரையும் கற்றலின் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஒரு சிறந்த  சூழல் உருவாகும்" என சுற்றறிக்கையில் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், செய்முறை விளக்கங்கள், அறிவியல் சோதனைகள், மற்றும் குழு விவாதங்களுக்கும் இந்த அமைப்பு மிகவும் ஏற்றதாக இருக்கும். மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்வதற்கும், மடிக்கணினி போன்ற தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தவும் இது வசதியாக இருக்கும்.

எனவே, இந்தச் சுற்றறிக்கையின் அடிப்படையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு, வகுப்பின் அளவு மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 'ப' வடிவ இருக்கை அமைப்பை உடனடியாக ஏற்படுத்த அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.