தமிழ்நாடு

"எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மிரட்டுகின்றனர்" திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு!

Malaimurasu Seithigal TV

மத்திய அரசுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மிரட்டி வருகின்றனர் என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி சமூகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்ததாக அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சூரத் அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது, இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டனையை நிறுத்தி வைக்க எந்த காரணங்களும் இல்லை என்று கூறி  ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பிற்கு பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்குதான் காரணம் எனக்கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் அறவழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகிறது

இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர் கே வி தங்கபாலு, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காங்கிரஸார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மத்தியில் ஆளக்கூடிய மோடி அரசு, இந்திய நாட்டின் ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியின் குரல்களையும் ஒடுக்குகின்ற விதத்தில் முற்றிலும் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என குற்றம் சாட்டினார். தொடர்ந்து, நாடு முழுவதும் இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகளில், அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சி தான் என கூறிய அவர், பல மாநிலங்களில் பல கட்சிகள் பாஜகவை எதிர்த்தாலும், பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது ராகுல் காந்தி தான் எனவும்  ராகுல் காந்தியை பார்த்து மத்திய மோடி அரசு பயப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய 10 நிமிட உரை பாஜகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் கூறிய ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அதன் காரணமாக மீண்டும் ராகுல்காந்தி அவர்களை உரையாற்ற விடாமல், பழைய வழக்குகளை கையில் எடுத்து தனக்கு சாதகமான மாநிலத்தில் தீர்ப்பை பெற்று ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர விடாமல் செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார். மேலும், அவர் குடியிருந்த வீட்டிலிருந்து அவரை வெளியேற்றி அராஜகமான முறையில் மத்திய அரசு செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர் ஒரு புறம் சட்டரீதியாக இந்த சவால்களை சந்தித்து வருவதாகவும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மிரட்டி வருகின்றனர். மத்திய அரசின் அமலாக்கத்துறை வருமானவரித்துறை போன்ற துறைகளில் மூலமாக தொல்லைகள் தந்து வருகின்றனர். ஆளுநர் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொடர்ந்து தொல்லை தருவதும் அதன் அரசை முடக்குவது போன்ற செயல்களையும் செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜனநாயக படுகொலையில் பிஜேபி அரசு ஈடுபட்டு வருகின்றனர். இதனை காங்கிரஸ் கட்சி  கண்டித்து நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இந்த அறவழி போராட்டம் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.