மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தர்கா அருகே உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள கருத்துக்களுக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ 20) தடை விதித்தது . இருப்பினும், ஒருமுறை மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக, இந்த ஆண்டு கார்த்திகை தீப தினமான நவம்பர் 24 அன்று தீபத்தூணில் விளக்கேற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு ஒருபக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பிய வண்ணமே உள்ளது. இந்த சர்ச்சை தொடங்கியது எப்போது?, முந்தைய அரசு செய்தது போல தற்போதுள்ள தவெக அரசு செயல்படுமா?.
தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையானது இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் ஒருங்கிணைத்து காணப்படுகிறது. புனித தலமாக இருந்த இந்த மலை சர்ச்சைக்குரியதாக மலையாக கடந்த 2025-ம் ஆண்டில் உருவெடுத்தது. இது 2025-ல் தான் ஆரம்பித்தது என்று நீங்கள் நினைத்தால் அப்படி இல்லை. 1920-களில் இருந்தே இந்த மலைக் குறித்த சர்ச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது.
2025ல் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள், சிக்கந்தர் அவுலியா தர்கா அருகே உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வை அணுகின. அதுவே பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட வேண்டிய இடம் என்றும் அவர்கள் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவினை பிறப்பித்தார். ஆனால், தர்காவிற்கு மிக அருகில் விளக்கேற்றுவது என்பது சமூக நல்லிணக்கத்தைக் பாதிக்கும் என்று வாதிட்டு, தமிழக அரசு இந்த தீர்ப்பினை ஏற்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து, இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி பதட்டமான சூழலாக மாறியது. தமிழ் கடவுளாக அறியப்படும் முருகனை சுற்றி அன்றைய சூழலில் 'அரசியல் சர்ச்சை' பல எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மனுதாரர் இராம. இரவிக்குமார் தரப்பில் இருந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "மனுதாரர் மற்றும் 10 பேர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்போடு சென்று தீபம் ஏற்றலாம்" என உத்தரவிட்டார். ஆனால், அப்போதும் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
அந்த மலை பகுதியில் இஸ்லாமிய தர்காவும், கோவிலும் உள்ளதோடு, காலம் காலமாக இரு மதத்தினை சேர்ந்தவர்களும் சகோதர சகோதரிகளைப் போல ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி அந்த மலையில் சமண எச்சங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை குலைக்கும் வகையில் இது அமையும் என்பதால், மூத்த காவல் அதிகாரி ஒருவர், "We will face the consequences" (நாங்கள் உங்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம். அதன் விளைவுகளை நாங்கள் சந்திப்போம்) என்று கூறியது நாடளவில் திருப்பிப் பார்க்க வைத்த ஒரு நிகழ்வாக அமைந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிருப்தியும் தெரிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்தியக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதி சுவாமிநாதனைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பதவி நீக்கத் தீர்மான அறிவிப்பைச் சமர்ப்பித்தது அன்றைய சூழலில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இந்த மலை குறித்த சர்ச்சையை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, இதன் அமைப்பை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடு திருப்பரங்குன்றம். இந்த மலை உச்சியில், சுப்பிரமணியசுவாமி கோயில், காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் சிக்கந்தர் அவுலியா தர்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும், இங்கு சமண படுகைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமாக, கார்த்திகை தீபம் தர்கா அருகே உள்ள தூணில் ஏற்றப்படாமல், மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோயிலின் மண்டபத்தில்தான் ஏற்றப்பட்டு வருகிறது.
1923-ம் ஆண்டில், மதுரை சார்பு நீதிமன்றம் 'சில சாகுபடி செய்யப்பட்ட மற்றும் வரி விதிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் மசூதி அமைந்துள்ள இடம் தவிர', அந்த முழு மலையும் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், 1931-ல் மதுரை துணை நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட லண்டன் பிரிவி கவுன்சிலாலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், மத நல்லிணக்கத்தினை காக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக அடுத்தடுத்து வந்த தீர்ப்புகள் அமைந்தன.
ஆனால், இந்த பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக இருந்தது, 'தீபத்தூண்'. அந்த தூணானது ஒரு 'ஜைன தூண்' என்றும் கூட சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது ஒரு ஜைன தூணாக இருக்க வாய்ப்பில்லை என்றும், அந்தத் தூண் ஒரு நில அளவை அடையாளமாகவும் இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுவதாகவும் கருத்துக்கள் பரவி வந்தன. மேலும், 1802-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட சர்வே தூண் என்று தொல்லியல் துறை தரப்பில் இருந்து கூறப்பட்டது. 1862-ம் ஆண்டில் இருந்தே திருப்பரங்குன்றம் மலை குறித்த சர்ச்சை இருந்து வரும் நிலையில் தற்போது வரை அது முடிந்தபாடில்லை. இதுமட்டுமின்றி, அக்டோபர் 2025-ல், சென்னை உயர் நீதிமன்றம் தர்காவில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று (நவ 20) சென்னை உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்றுவது தொடர்பாக தீர்ப்பினை அளித்தது. அதில், ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தீபத்தூணில் விளக்கேற்ற நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால், இதனை இறுதி தீர்ப்பாக கருதக்கூடாது என்றும்நீதிமன்றம் குறிப்பிட்டது.
மகா கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற சென்னை நீதிமன்றம் அனுமதியளித்திருந்த நிலையில், "இந்தத் தீர்ப்பு பக்தர்களுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி" என்று குறிப்பிட்டு தமிழக பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் வரவேற்றனர்.
நைனார் நாகேந்திரன்:
தீபத்தூண் ஒளிரும்!
எங்கள் கண்கள் குளிரும்!
தமிழகம் முழுவதும் முருகனின் திருநாமம் ஒலிக்கும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக, திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவே விடமாட்டோம் எனத் திமுகவும் தவெகவும் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளையும் முறியடிக்கும் வகையில், வரும் 24-ஆம் தேதி மகா கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதியளித்துள்ள மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தலைவணங்கி வரவேற்கிறேன். பல ஆண்டுகளாக முருக பக்தர்களின் நெஞ்சங்களை அழுத்தி வந்த சோகமும், கோடிக்கணக்கான இந்துக்களின் கண்களில் குடிகொண்டிருந்த ஏக்கமும் இன்று பஞ்சாகப் பறந்து விட்டன! ‘மத நல்லிணக்கம்’ என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித்திட்டங்களை தவிடுபொடியாக்கும் வகையில், மதவாத அரசியலின் மீது அடிக்கும் சம்மட்டி அடியாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பினை வாசித்த மறுநொடி எனது கண்கள் கலங்கிவிட்டன.
முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்காக கால் கட்டை விரல் தேய நீதிமன்றங்களின் படியேறி போராடிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், ஒரு அரசியல் தலைவராக அன்றி, எம்பெருமான் முருகனின் ஆஸ்தான பக்தனாக எனது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!. ஆயிரம் கரங்கள் தடுத்தாலும் , குன்றம் முழுவதும் குமரனுக்கே சொந்தம்!. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீர வேல் முருகனுக்கு அரோகரா! என்று தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவா்:
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நிகழாண்டு தீபம் ஏற்றலாம் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவு இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
தமிழிசை சௌந்தரராஜன்:
திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்!... நிரந்தர தீர்வுக்காக காத்திருந்த வேளையில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றுக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு ஓரளவிற்கு நமக்கு மகிழ்ச்சியே... வெற்றுத்தூனை பார்க்க வேண்டும் என்று இந்த ஆட்சி நினைத்தாலும் விளக்கேற்றிய வெற்றித்தூனை நாம் பார்க்கப் போகிறோம் என்ற வகையில் மகிழ்ச்சிதான்!... இந்த நாளை இந்த நட்சத்திரத்தை இந்த உணர்வை உச்சநீதிமன்றம் மதித்திருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சியே... இந்த ஆண்டு தீபம் ஏற்றுவது போலவே வரும் ஆண்டுகளிலும் தீபம் ஏற்றுவோம் என்ற நம்பிக்கையோடு தீபத்திருநாளை கொண்டாடுவோம்! என்று தனது சமூகவலைதளபக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
திண்டுக்கல் சீனிவாசன்:
“திருப்பரங்குன்றத்தில் மசூதி அருகே கல் தூணில் இந்தாண்டு ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பால் நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் இறைவன் இருக்கிறான் என்பது உறுதியாகியுள்ளது” என்று திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்திருந்தார்.
இவ்வாறாக, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், மதுரையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ்வாறாக கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு குரல்களும் எழும்ப தொடங்கின.
திருமாவளவன்:
உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது!
மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்! என்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
சிந்தனை செல்வன்:
விசிக பொதுச் செயலாளரான சிந்தனை செல்வன், கார்த்திகை திருநாளில் சமய நல்லிணக்க விளக்கை அணைப்பதா!.
இந்த தீர்ப்பு… திருப்பரங்குன்றத்தில் தீயை மூட்டவா? தீபம் ஏற்றவா?. சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய…அருட்பெருஞ்சோதி ஒளிரட்டும்! நீதியின் மயக்கம் தெளியட்டும்! என்று தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மு.க.ஸ்டாலின்:
முன்னாள் முதல்வரான மு.க. ஸ்டாலின், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
பெ. சண்முகம்:
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு கண்டனத்துக்குரியது என்றும் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த தீர்ப்பு அல்ல என்றும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியில் கூறியிருந்தார்.
இவ்வாறாக இந்தாண்டு நவம்பர் 24-ம் தேதி மட்டும் விளக்கேற்றி கொள்ளலாம் என்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பும் ஆதரவுமாக கலந்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
கடந்த முறை திமுக அரசு, இந்த திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்தை காப்பதாக கூறி தீபத்தூணில் விளக்கென்ற அனுமதிக்கவில்லை என்பது நாம் அறிந்ததே. அப்படி இருக்க இந்த முறை, 'இந்த ஒரு முறை மட்டும் விளக்கேற்றி கொள்ளலாம்' என்ற தீர்ப்பினை கூட்டணி கட்சியில் இருக்கும் இடதுசாரிகளும் சரி, விசிக-வும் சரி இருகட்சிகளும் எதிர்த்து வரும் நிலையில் தவெக இதனை எவ்வாறு அணுகும்? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவில் தெரளிவாக கூறியிருந்தாலும் கூட பின்னாட்களில் இந்த விவகாரத்தில் பிரச்சனைகள் வருமா? என்ற கேள்விகளும் எழுகின்றன. "திருப்பரங்குன்றம் அடுத்த அயோத்தியாக மாறும்," என தமிழக பாஜகவின் மூத்த தலைவரான எச். ராஜா, கடந்த ஆண்டு 2025 பிப்ரவரி-ல் கூறினார். அதனடிப்படையில் இது அடுத்த அயோத்தியாக.. அதாவது இந்த திருப்பரங்குன்றம் மலையை சுற்றி அரசியல் காற்று அடிக்குமா?. அப்படி அடித்தால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வாறு அதனை எதிர்கொள்ளும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.