நீதிமன்ற உத்தரவுபடி மலை உச்சியில் இருக்கும் தூணில் தீபம் ஏற்றப்படுமா? இல்லை வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோவில் தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி இந்த நொடி வரை பலரது எதிர்பார்ப்பில் உள்ளது. சரியாக ஆறு மணிக்கு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவருக்கு பால தீபம் ஏற்றப்பட்டு அதன் பின்னர் மலை மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகர காவல்துறை ஆணையர், வருவாய் துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், திருக்கோவில் அலங்காவலர்கள் மலைக்கு சென்றுள்ளனர். மேலும் மலை உச்சியில் இருக்கும் தூணுக்கு அருகில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக நிற்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழகமே உற்றுநோக்கும் பரபரப்பான சூழலில் இன்னும் சற்று நேரத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றும் விவகாரம் மதுரையில் மட்டுமின்றி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற இந்தக் கைதுகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
தீப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்ல பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் தமிழிசைக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டடுள்ளது.
அப்போது கையில் வேலுடன் வந்திருந்த தமிழிசை, தான் ஒரு பக்தராகவே கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாகவும், பக்தராக திருப்பரங்குன்றம் செல்லக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், தன்னைத் தடுப்பதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை தீப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனையும் போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்துள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தான் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்வதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை என்றும் கூறினார். மேலும், 144 தடை உத்தரவு திருப்பரங்குன்றத்திற்குத்தானே என்று கேள்வி எழுப்பிய அவர், தனது தனிமனித உரிமை மீறப்படுவதாகக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம், பாலியல் வன்கொடுமைகள், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், அவற்றைத் திசைதிருப்புவதற்காகவே முதலமைச்சர் ஜோசப் விஜய் திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பெரிதாக்குவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இறைவன்தான் இந்த ஆட்சிக்கு இனிமேல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாஜக தலைவர்கள் கைது, போராட்டங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகள் என அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் எங்கு தீபம் ஏற்றப்படும், நிகழ்ச்சி எவ்வாறு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்