தமிழ்நாடு

தொடர் மழை: நீரில் மூழ்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள்  

தொடர் மழை காரணமாக தஞ்சையில், அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து, 66 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தஞ்சையில் கடந்த சில நாட்களாக, விட்டு விட்டு, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேலையூர், குலமங்கலம், காட்டூர், வாண்டையார் இருப்பு  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக  இருந்த பல ஆயிரம் ஏக்கர் நெல்கதிர்கள், வயல்களில் சாய்ந்தன. இந்தாண்டு குறுவைக்கு  பயிர் காப்பீடு இல்லாத நிலையில், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டத்திலும், 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தரங்கம்பாடி, கீழ்மாத்தூர், ஒட்டங்காடு, ஆனைமட்டம், ராமன்கோட்டகம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக, கன மழை பெய்து வருவதால், நடவு செய்யப்பட்டிருந்த சுமார், 150 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், உரிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.