சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலை பதாகைகளில் இந்தியில் ஊர் பெயர்கள் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை எழுந்தநிலையில், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து கவர்களில் இந்தி இடம்பெற்றிருந்தது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து முதலில் பதிவு செய்த திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, "தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல ! முதலில் கரூர்... இப்போது கோவையிலும் அதே நிலமை..." என்றும், "மாற்றம் nagee hai - நாற்றம் hai hai - Hindi hai Why hai ?!? - This is one more துரோகம் hai hai" என்றும் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து விளக்கம் அளித்த தமிழக வெற்றிக் கழக ஐடி விங், "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாக தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு.
உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. அதை மூடி மறைத்து, தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டு தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகம் ஆடுகிறது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார்."
"1996ல் ஆட்சி அமைத்த தீயசக்தி தி.மு.க., அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படியான இந்திய அரசியல் சாசனப் புத்தகம் தரப்பட்டது என 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்திலேயே அப்போதைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தையே அவையில் காட்டி தீயசக்தி தி.மு.க.வின் முகத்திரையைச் சுக்கு நூறாகக் கிழித்ததுதான் சட்டமன்றப் பேரவை வரலாறு. அன்றைக்கு தி.மு.க. சார்பாகப் பதிலளித்த மதிப்பிற்குரிய மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்று கூறியதும் சபைக்குறிப்பில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.
ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திக்குப் பக்க வாத்தியம் வாசித்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் மண், மொழி, இனம், மானம் காக்கும் உத்தமர் போல வேடம் போட்டுக் குதிப்பதும், பின்னர் குட்டு உடைந்து குப்புற விழுந்து மூக்குடைபடுவதும் வாடிக்கை என்பதுதான் தீயசக்தி தி.மு.க.வின் வரலாறு." என பதிலடி கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில் வட மாநில தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்தியில் மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும் என்ற குறிப்புகள் இந்தியிலும் இருப்பது அவர்களுக்கு உதவியானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மருந்து வழங்கும் உறையில் இந்தியும் இடம் பெற்றிருந்த நிலையில் இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே உள்ள உறைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இன்று இந்தி இடம் பெற்றிருந்த உறைகள் நிறுத்தப்பட்டு கையால் எழுதிய உறைகள் வழங்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையில் மதுரை கள்ளழகர் கோவிலின் வரவேற்பு வளைவில் தமிழில் எழுதப்பட்டிருந்த பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் அது பொய் செய்தி என்றும் பரவிவரும் புகைப்படம் போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்றும் அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்தது.
இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்த அமைச்சர் ரமேஷ், "இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய இந்தச் செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கண்டித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்