தமிழ்நாடு

ரூ. 155 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவ பூங்கா...அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

திண்டிவனத்தில் 155 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவ பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் வளாகத்தில், 155 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள மருத்துவ பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 நிறுவனங்களுக்கு 9 கோடியே 75 லட்சம் ரூபாய், பங்கு முதலீடு செய்வதற்கான ஒப்புதல் ஆணைகளையும், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.