srinivasa sethupathi  
தமிழ்நாடு

“இது தான் உண்மையான ஒரு விரல் புரட்சி” - சர்க்கார் பட பாணியில் நடந்த சம்பவம்.. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்!

திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி 1 ஓட்டு அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்..

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி கடந்த 20 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வசமாகி உள்ளது. இதில் சிறப்பம்சமாக த. வெ.க தலைவர் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் ஒரு ஓட்டின் வெற்றியை பற்றிய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் அந்த ஒரு ஓட்டால் அடைந்த பல வெற்றிகளின் வரலாறுகளை விஜய் கூறுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அது போல இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியில் தவெக சார்பாக ஸ்ரீனிவாச சேதுபதி போட்டியிட்ட நிலையில், திமுக சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் போட்டியிட்டார். நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மாலை வரை இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில் மாலை போல இருவரில் யார் வெற்றி பெறுவார் என குழப்பம் ஏற்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி 1 ஓட்டு அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். ஒரே ஓட்டில் 20 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது இப்பகுதியில் மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி சான்றிதழை பெற்ற தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி “இவ்வளவு பெரிய பதவிக்கு வாய்ப்பு கொடுத்த தமிழக முதலமைச்சர் விஜய் உழைப்புக்கு நன்றி. திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கும் நன்றி. தளபதியை நம்பி வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி விஜய்க்கு கிடைத்த வெற்றி, விசிலுக்கு கிடைத்த வெற்றி எனக்காகவோ, இளம் வேட்பாளர் என்பதற்காகவோ கிடைத்த வெற்றி அல்ல.

எனக்காக வாக்களித்த அனைவருக்காகவும் கடமை ஆற்றுவேன். இதுவரை திருப்பத்தூர் தொகுதிக்கு யாரும் எதுவும் செய்யவில்லை, இனிமேல் திருப்பத்தூர் தொகுதிக்கு என்ன செய்ய வேண்டும் என்று செயலில் காண்பிப்போம். பதவி ஏற்று வந்த பிறகு பொறுமையாக பேசுகிறேன் என கூறி” பேட்டியளித்த தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திருப்பத்தூர் பகுதியில் மட்டுமல்லாமல் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்ற சம்பவம் அரசியல் விமர்சகர்களிடமும் பேசுபொருளாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.