திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த நடுவச்சேரி சாலையில் உள்ள ஓடைக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி கூட உரிமையாளரான ராஜன் (75).
இவர், அவிநாசி மாமரத் தோட்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது பேரன் மற்றும் பேத்தியை தினந்தோறும் ஸ்கூட்டரில் காலை மற்றும் மாலையில் பள்ளியில் விட்டு மீண்டும் அழைத்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்..
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளியில் இருவரையும் விட்டுவிட்டு, வேளாண்துறை மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே வந்துள்ளார். அப்போது சாலையோரம் உள்ள காய்கறி கடைகளுக்கு காய்கறிகள் லோடு இறக்குவதற்காக அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பண்ணான் (58) ரோட்டிலேயே தனது சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு கவனக்குறைவாக திடீரென ஆட்டோ கதவை திறந்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத ராஜன் நிலைதடுமாறி சரக்கு ஆட்டோ கதவில் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந் ராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பெற்று வந்த ராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பண்ணான் மீது வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவிநாசி சேயூர் சாலையில் வேளாண்துறை அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், எம் எல் ஏ அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர காய்கறி கடைகளால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதால் பல்வேறு சமயங்களில் பலத்த காயம் மட்டுமல்லாது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது என்றும், இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இனிமேலும் விபத்துக்களால் உயிரழப்போ பலத்த காயங்களோ ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்